கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் மட்டும் இப்படம் வெளியாகவில்லை. இப்படத்திற்கு முன்பதிவு சிறப்பாக இருந்ததால், முதல் நாள் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தக் லைஃப் படத்திற்கு சுமார் 14 கோடி ரூபாய் வரை முன்பதிவில் வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
24
தக் லைஃப் ரிலீஸ்
கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 2200க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது. இது ஒரு உணர்ச்சிமிக்க கேங்ஸ்டர் டிராமா. கமலுடன் சிலம்பரசன், திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தியாவில் ரிலீஸ் ஆகும் முன்பே அதன் காட்சிகள் அமெரிக்கா மற்றும் துபாயில் திரையிடப்பட்டன. அங்கு படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகிறார்கள்
34
கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாத தக் லைஃப்
தக் லைஃப்படத்தின் இசை வெளியீட்டில், கன்னடம் தமிழில் இருந்து பிறந்த மொழி என்று கமல்ஹாசன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கன்னட மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கர்நாடகாவில் படம் திரையிட தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. இதனால் படக்குழுவிற்கு 10-15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி நாயகன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்திற்கு பின் இணைந்துள்ள படம் என்பதால் 'தக் லைஃப்' மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமைந்தது. முன்பதிவில் 14 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதால், உலகம் முழுவதும் இப்படம் முதல் நாளில் சிறப்பான வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் 1000 திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது. முதல் நாளில் 1 மில்லியன் டாலர் வசூலிக்கும் என திரை வல்லுநர் ஸ்ரீதர் பிள்ளை தெரிவித்துள்ளார். அதேபோல் இப்படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.45 கோடிக்கு மேல் வசூலிக்கும் என திரை வல்லுநர் ரமேஷ் பாலா கணித்துள்ளார். ஒட்டுமொத்தமாக தக் லைஃப் திரைப்படம் முதல் நாளில் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.