காலத்தால் அழியாத கலைஞரின் சினிமா... சினிமாவில் சிங்கம் போல் கர்ஜித்த கருணாநிதியின் திரையுலக பயணம் ஒரு பார்வை

First Published Jun 3, 2022, 10:11 AM IST

Kalaignar Karunanidhi birthday : மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 

தமிழ் சினிமாவில் புராணங்கள், இலக்கியங்கள் என பழகிப்போன கதைகளையே மீண்டும் மீண்டும் படமாக எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், பல்வேறு சமூக கருத்துகள் கொண்ட படங்களை வழங்கி, சினிமா மூலம் சமூகத்தில் மாற்றத்தைக் கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் கலைஞர் மு.கருணாநிதி.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமா என்பது, ஒரு கலையாக மட்டுமின்றி, அது மக்களின் ஒரு உணர்வாகப் பார்க்கப்பட்டு வருகிறது. திரையில் தோன்றும் நாயகர்களை நிஜத்திலும் ஹீரோக்களாக பார்க்கும் பழக்கம் இன்றுவரை தமிழ்நாட்டில் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், சினிமா பிரபலங்களை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடிய காலத்தில், அந்த சினிமாவின் உண்மையான சக்தியைக் கண்டறிந்து அதனை முழுமையாக பயன்படுத்தியவர் என்றால் அது கருணாநிதி தான்.

சிறுவயது முதலே தமிழ் மொழியின் மீது அதிகம் பற்று கொண்டிருந்த கருணாநிதி, நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகளை எழுதி, தனது எழுத்துத் திறமையை மெருகேற்றி வந்தார். அதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக, நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார் கலைஞர்.

தமிழகத்தில் திராவிட கொள்கைகள் இன்றளவும் வேரூன்ற முக்கியமான காரணம் கருணாநிதி தான். அவர் திரைக்கதை எழுதிய பெரும்பாலான படங்களில் திராவிடக் கொள்கைகளை விதைத்து அதனை மக்கள் மனதில் புகுத்தினார்.

அவர் முதன்முதலில் சினிமாவில் திரைக்கதை எழுதிய படம் ராஜகுமாரி, எம்ஜிஆர் நடிப்பில் 1947 ஆம் ஆண்டு வெளியான இப்படம் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கலைஞர் தான் பணியாற்றிய பெரும்பாலான படங்களில் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள் மற்றும் மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தி அவரின் ‘பராசக்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான இப்படத்திற்காக கலைஞர் எழுதிய வசனங்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. தங்கரதம், பணம் போன்ற படங்களில் தீண்டாமை, விதவைகள், சுய மரியாதைத் திருமணங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளைப் பற்றி ஆழமாக பேசியிருந்தார் கலைஞர். பிராமண மொழிகளில் படங்கள் எடுக்கப்பட்ட கலாச்சாரத்தை உடைத்து, பேச்சு வழக்கு தமிழ் மொழியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் கலைஞர்.

தற்போதைய காலகட்டத்தில் சமூக கருத்துகளைப் பற்றிய படங்களை எடுத்தால் அது சர்ச்சையில் சிக்குவதோடு, தடையும் செய்யப்படுகின்றன. ஆனால், அந்தக் காலத்திலேயே சமூகப் பிரச்சனைகள் அதிகம் பேசப்பட்டதால், கலைஞரின் நாடகங்களுக்கும், படங்களுக்கும் பல முறை தடைவிதிக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பராசக்தி படம். மேலும், கடந்த 1950-ம் ஆண்டு கலைஞரின் இரண்டு நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என சினிமாத் துறையில் தனது சீரிய எழுத்துகளால் கர்ஜித்தவர் கருணாநிதி என்றால் அது மிகையாகாது.

இதையும் படியுங்கள்... HBD Kalaignar Karunanidhi : தமிழக்தின் திராவிட மாடலுக்கு 99வது பிறந்தநாள் இன்று !!

click me!