தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி கோலிவுட்டில் சக்கை போடு போட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து அசத்தியிருந்தார் ஜெயம் ரவி. அப்படத்தின் வெற்றிக்குப் பின் இறைவன், சைரன், அகிலன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் ஜெயம் ரவியின் தந்தை மோகன், இவரும் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் ஆவார். சமீபத்தில் மோகன் - வரலட்சுமி தம்பதியின் ஐம்பதாவது திருமண நாளை அவரது மகன்களான ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா இருவரும் கோலாகலமாக கொண்டாடினர். அது குறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
நடிகர் தங்கவேல் வீட்டில் தான் சிறுவயதில் வளர்ந்ததாகவும், தங்கவேலுக்கு குழந்தைகள் இல்லாததன் காரணமாக அவர் தன்னை குழந்தையாக தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும் மோகன் தெரிவித்துள்ளார். அப்போது அவர் தான் தனக்கு மோகன் என பெயர் வைத்ததாக கூறிய அவர், தங்கவேல் மூலம் தான் சினிமாவில் எடிட்டிங் கற்றுக்கொண்டதாக கூறி உள்ளார்.