நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளது தான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. தனது அரசியல் எண்ட்ரியை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக தான் அவரின் சமீபத்திய கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா இருந்தது. அதில் அவர் பேசிய பேச்சும் அவரின் அரசியல் ஆசையை ஆங்காங்கே வெளிப்படுத்தி இருந்தன. விஜய் அரசியல் வருகை குறித்து பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வஸந்தன் விஜய்யின் அரசியல் வருகையை ஆதரிக்கும் விதமாக பேஸ்புக்கில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது : “234 தொகுதிகளிலும் 10, 12 வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்க்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வை நடத்திய விஜய், இதைவிட வெளிப்படையாக தன் அரசியல் நோக்கத்தை மக்களுக்குச் சொல்லியிருக்க முடியாது. அந்தத் துணிவிற்கும், தெளிவிற்கும், உறுதிக்கும் பாராட்டு தெரிவிக்காமல் இருக்கமுடியாது. அதைத் தேர்ந்தெடுத்த தளமும் அற்புதமானது. இது எத்தனை இளம் உள்ளங்களை உற்சாகப்படுத்தியிருக்கும், உத்வேகப்படுத்தியிருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது.