தாரை தப்பட்டை கிழிய போகுது.. அடுத்த 5 மாசமும் அதிரடி சரவெடியாய் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் படங்களின் லிஸ்ட் இதோ

First Published | Jul 31, 2023, 12:21 PM IST

தமிழ் சினிமாவில் அடுத்த 5 மாதங்கள் விஜய், ரஜினி, ஷாருக்கான், பிரபாஸ் போன்ற பிரம்மாண்ட நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை 2023-ம் ஆண்டின் முதல் 7 மாதங்கள் சற்று ஆச்சர்யமான ஒன்றாகவே இருந்தது. ஏனெனில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட சிறு பட்ஜெட் படங்கள் அதிகளவில் வெற்றிபெற்றுள்ளன. கவினின் டாடா தொடங்கி, சசிகுமாரின் அயோத்தி, மணிகண்டன் நடித்த குட் நைட், அசோக் செல்வனின் போர் தொழில், சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளன. இனி அடுத்த 5 மாதம் முழுவதும் பிரம்மாண்ட படங்கள் ரிலீசுக்காக வரிசைகட்டி காத்திருக்கின்றன. அதனை பற்றி பார்க்கலாம்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதம் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர விக்ரம் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் திரைப்படமும் ஆகஸ்ட்டில் திரைக்கு வர உள்ளது.

Tap to resize

செப்டம்பர்

செப்டம்பர் மாதம் முழுவதும் பான் இந்தியா படங்கள் அதிகளவில் ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி செப்டம்பர் 1-ந் தேதி சமந்தா, விஜய் தேவரகொண்டா நடித்த குஷி ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 7-ந் தேதி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. பின்னர் செப்டம்பர் இறுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையன்று சந்திரமுகி 2 மற்றும் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அத்தோடு பிரபாஸின் பிரம்மாண்ட திரைப்படமான சலாரும் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்... அடேங்கப்பா மூன்றே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா... பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்த டிடி ரிட்டன்ஸ்!

அக்டோபர்

அக்டோபர் மாதம் விஜய்யின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்துடன் போட்டி போடும் படங்கள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. இதற்கு அடுத்தபடியாக மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் வருகிற அக்டோபர் 30-ந் தேதி ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

நவம்பர்

நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வருவதால், அம்மாதம் ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம், ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

டிசம்பர்

டிசம்பர் மாதம் 15-ந் தேதி விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் மற்றும் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் ஆகிய திரைப்படங்களும் டிசம்பர் மாத வெளியிட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... வேட்டையன் ராஜாவாக மாஸ் காட்டும் ராகவா லாரன்ஸ்... இணையத்தை கலக்கும் சந்திரமுகி 2 பர்ஸ்ட் லுக்

Latest Videos

click me!