சினிமா பைனான்சியராக வலம் வரும் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது 24 மணிநேரங்களைக் கடந்து இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிரது. சென்னை மற்றும் மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
இவர் ஐடி ரெய்டில் சிக்குவது இது முதல்முறை அல்ல, இதற்கு முன் கடந்த 2020-ம் ஆண்டும் இதேபோல் இவருக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் அவற்றின் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கோலிவுட்டில் தயாராகும் 70 முதல் 80 சதவீத படங்களுக்கு இவர் தான் பைனான்சியர் என்றும் சொல்லப்படுகிறது. எந்த ஒரு திரைப்படம் ரிலீசாக வேண்டும் என்றாலும் அதற்கு அன்புச்செழியனின் தயவு நிச்சயம் தேவை என்கிற நிலைதான் தற்போது தமிழ் சினிமாவில் உள்ளதாம். அந்த அளவுக்கு சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் என கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கிறார் அன்புச்செழியன்.
இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டும் நடிகர் சசிகுமாரின் சகோதரர் அசோக் குமார் என்பவர் தற்கொலை செய்தபோது அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் அன்புச் செழியன் பெயரும் இடம்பெற்று இருந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் அன்புச்செழியன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.