இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காதல், சோகம், வேதனை, துக்கம் போன்ற பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசை தான். அதே போல், பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம்.
இவரது இசைக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா, தற்போது தமிழில் மாயோன் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். 78 வயதிலும் ஓயாது உழைத்து வருகிறார் இளையராஜா. அவரது இசைக்கு தற்போது மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவர்கள் குழுவினர், இந்த ஆண்டும் அதே பாணியில் ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளனர்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு முடிவு செய்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகள் இந்தியாவில் நிகழ்ந்த புதுமைகளையும், இனிவரும் காலங்களில் இந்த பாரதம் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கிய பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்பாடலை சுவானந்த் கிர்கிரே எழுத, இளையராஜா தன் சொந்த குரலில் பாடி இசையமைத்துள்ளார். இதன்மூலம் இளையராஜாவின் இசை விரைவில் விண்வெளியிலும் ஒலிக்க உள்ளது.