இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, அடுத்ததாக விஜய்யின் தெறி படத்தை இயக்கும் பிரம்மாண்ட வாய்ப்பையும் அட்லீக்கு பெற்றுத்தந்தது.
விஜய்யின் தீவிர ரசிகரான அட்லீ, தெறி படத்தை செம்ம மாஸ் ஆக எடுத்து வெற்றி வாகைசூடினார். அட்லீயின் மேக்கிங் ஸ்டைல் விஜய்க்கு மிகவும் பிடித்துப் போனதால், அடுத்தடுத்து தான் நடித்த மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்கும் வாய்ப்பை வழங்கினார் விஜய். இந்த இரண்டு படங்களுமே பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததால், அட்லீ - விஜய் கூட்டணி ஹாட்ரிக் ஹிட் கொடுத்தது. இதையடுத்து அட்லீக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஷாருக்கான் படம்.
தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்கிற பாலிவுட் படம் தயாராகி வருகிறது. ஷாருக்கான் தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். மேலும் யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... AK 62 : அஜித் மற்றும் லைக்காவிடம் சிக்கித் தவிக்கும் இயக்குனர்! படபிடிப்பு எப்போது? - வெளியான தகவல்!
ஜவான் படத்தை வருகிற ஜூன் 2-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்தாண்டு வெளிவந்த டீசரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை ஷூட்டிங் நிறைவடையாததால், இப்படம் ஜூன் மாதம் வெளியாக வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. ஷூட்டிங்கை முடித்து கிராபிக்ஸ் மற்றும் பின்னணி பணிகள் இருப்பதால், இப்படத்தை ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜவான் படம் அக்டோபருக்கு தள்ளிப்போவதால், அப்படம் விஜய்யின் லியோ படத்துடன் மோத உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஜவான் படக்குழுவின் இந்த திடீர் மாற்றத்தால், லியோ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் லியோ படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இதன்மூலம் இந்தியிலும் விஜய்யின் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜவான் படமும் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என்கிற தகவல் லியோ படத்துக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. அதனால் ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சமயத்தில் அப்படத்துடன் வெளியானால் லியோவின் வசூலுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஜவான் படம் அக்டோபரில் ரிலீஸாகும் என்கிற தகவலை அறிந்த ரசிகர்கள், வளர்த்துவிட்ட விஜய்க்கே அட்லீ விபூதி அடிக்க பார்ப்பதாக அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ‘தவறான படங்கள் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படுகின்றன’.. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பளீச் பேட்டி !