தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் பேரரசு இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மகதீரா திரைப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் காஜல். இதன்பின்னர் அவருக்கு தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன.
குறிப்பாக தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி போட்டு நடித்த காஜல் அகர்வால், கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்பமானதால், சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.
தற்போது இந்தியன் 2 பட ஷூட்டிங் முடிவடைய உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக பகவந்த் கேசரி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் காஜல். இந்த இரு படங்களிலும் நடித்து முடித்த பின்னர் நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.