ராக்கம்மா கைய தட்டு பாடல் கம்போஸிங்கில் இளையராஜா செய்த மேஜிக்; மெர்சலான இசைக்கலைஞர்கள்!
மணிரத்னம் இயக்கிய தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கைய தட்டு பாடல் உருவானதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய கதையை இளையராஜா பகிர்ந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கைய தட்டு பாடல் உருவானதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய கதையை இளையராஜா பகிர்ந்துள்ளார்.
இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) பல்வேறு இயக்குனர்களுடன் பணியாற்றினாலும், அவரும் மணிரத்னமும் இணைந்தால் அவர்கள் கூட்டணியில் உருவாகும் பாடல்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. அக்னி நட்சத்திரம், மெளன ராகம், நாயகன், அஞ்சலி என இவர்கள் காம்போவில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் காலம் கடந்து கொண்டாடப்படுகின்றன. இவர்கள் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் தளபதி. அப்படத்திற்கு பின் இருவரும் இணையவில்லை. அதன்பின் மணிரத்னம் இயக்கிய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார்.
இளையராஜா - மணிரத்னம் இணைந்த கடைசி படம்
இளையராஜா - மணிரத்னம் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படமான தளபதியில் ஒவ்வொரு பாடலும் தனி ரகம் என்றே சொல்லலாம். இப்படம் வேறலெவல் ஹிட் ஆனதற்கு அப்படத்தின் பாடல்களும் ஒரு முக்கிய காரணம். தளபதி படத்தின் பாடல் கம்போஸிங் முழுவதும் மும்பையில் தான் நடைபெற்றதாம். அதன்படி அப்படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கைய தட்டு பாடல் கம்போஸிங்கின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை இசைஞானி இளையராஜா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்.... இளையராஜாவுக்கு தில்ல பாத்தீங்களா! இதெல்லாம் அவர் வீரப்பன் ஏரியாவில் கம்போஸ் செய்த பாடல்களாம்
ராக்கம்மா கைய தட்டு பாடல் கம்போஸிங்
அதன்படி பாடலுக்கு நோட்ஸ் எழுதிக் கொடுத்து, இசைக் கலைஞர்கள் எல்லாம் வாசிக்க ரெடியாகிவிட்டார்களாம். அந்த நேரத்தில் மணிரத்னம் வந்து, ராஜா இந்த பாடலில் தான் ஹீரோயின் எண்ட்ரி இருக்கும் என்று சொன்னனே மறந்துட்டீங்களா என கேட்க... அதற்கு ராஜாவும் அட அத மறந்துட்டேனே மணி என சொன்ன கையோடு, தன்னுடைய உதவியாளர் ஒருவரிடம் உனக்கு தேவாரம் பாடல் தெரியுமா என கேட்க, அவரும் தெரியும் என சொல்லி, “குனித்த புருவமும்” என தொடங்கும் ஒரு தேவாரம் பாடலை சொல்லி இருக்கிறார்.
இளையராஜாவின் மேஜிக்
உடனே கோரஸ் பாட வந்த பெண்களிடம் அந்த தேவாரம் பாடல் வரிகளை கொடுத்து, பாட சொல்லி இருக்கிறார் இளையராஜா. அவர்கள் பாடிய பின்னர் ராக்கம்மா கைய தட்டு பாடல் ஆரம்பிக்கும்படி கம்போஸ் செய்திருந்தார் இளையராஜா. இதைப் பார்த்த பாம்பே இசைக் கலைஞர்கள், வாயடைத்துப் போய்விட்டார்களாம். சில நிமிடங்களில் தேவாரம் பாடல் வரிகளை வைத்துக் கொண்டு இளையராஜா செய்த அந்த மேஜிக், அவர்களை மெய்சிலிர்க்க வைத்ததாம். அந்தப் பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.... இளையராஜா லேடி வாய்ஸில் பாடி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான பாடல் பற்றி தெரியுமா?