
ஹாரிஸின் இசை பயணம்
சென்னையில் கிறிஸ்தவ குடும்பத்தில் 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ந் தேதி பிறந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். கே.கே.நகரில் உள்ள கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவரது தந்தை ஒரு கிட்டார் இசைக்கலைஞர். தந்தையை போலவே ஹாரிஸுக்கும் இசை மீது ஆர்வம் வந்தது. ஹாரிஸுக்கு ஐந்தரை வயதிருக்கும் போது அப்துல் சர்தார் என்பவர் முதல்முதலில் ஹாரிஸின் இசை ஆர்வத்தை கண்டறிந்தார். இவருக்காக சிறிய கிட்டார் கருவி ஒன்றை பரிசளித்து அவரின் இசை ஆர்வத்துக்கு ஊந்துகோளாக இருந்தார்.
முதன் முதலாக அன்புக்கு நான் அடிமை என்கிற படத்தின் கன்னட ரீமேக்கிற்காக தனது 12 வயதில் இசைக்கலைஞராக பணியாற்றினார் ஹாரிஸ். சீவலப்பேரி படத்தின் மூலம் தான் இவருக்கு ஒரு இசைக்கலைஞருக்கான அங்கீகாரம் கிடைத்தது. படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றும் முன், தமிழ், மலையாளம், கன்னடம், போஜ்புரி, மராத்தி என பல்வேறு மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார் ஹாரிஸ்.
கமலுக்கு நோ சொன்ன ஹாரிஸ்
தொடக்கத்தில் விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஹாரிஸ் ஜெயராஜ், தன் முதல் இசைக்காக வெறும் 200 ரூபாய் தான் சம்பளமாக வாங்கி இருக்கிறார். வழக்கமாக தேடிச் சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜுக்கு முதல் படமான மின்னலே படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தேடி வந்தது. கவுதம் மேனனுக்கும் அது முதல் படம் என்பதால் அவர் தான் ஹாரிஸை தன் படத்திற்கு இசையமைக்குமாறு கேட்டிருக்கிறார். உடனே ஹாரிஸும் ஓகே சொல்லிவிட்டாராம்.
பின்னர் சில மாதங்களில் கலைப்புலி தாணு தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு ஹாரிஸுக்கு வந்திருக்கிறது. ஆனால் கெளதம் மேனனிடம் வாக்கு கொடுத்துவிட்டதால் கமல் பட வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் ஹாரிஸ்.
டிரெண்ட் செட்டர்
அவரின் இந்த முடிவு ஹாரிஸை ஒரு டிரெண்ட் செட்டராக மாற்றியது. மின்னலே படத்தின் இசை பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி முதல் படத்திலேயே உச்சத்துக்கு சென்றுவிட்டார் ஹாரிஸ்.
மின்னலே வெற்றிக்கு பின் 12பி, மஜ்னு, லேசா லேசா, சாமி என மெலடியில் புது வித்தியாசத்தை கொண்டு வந்து தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கினார். டூயட் பாடல் வந்தால் திரையரங்கை விட்டு ரசிகர்கள் வெளியே சென்ற அந்த காலகட்டத்தில் ஹாரிஸின் மெலடிப் பாடல்கள் ரசிகர்களை இருக்கையிலேயே கட்டிப் போட்டது. ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்தபடியாக முதல் படத்தில் இருந்தே ரசிகர்களை தன் வசப்படுத்திய இசையமைப்பாளர் என்றால் அது ஹாரிஸ் தான்.
இதையும் படியுங்கள்... ஒரு பாடலுக்காக தெருத் தெருவாக அலைந்த ஹாரிஸ் ஜெயராஜ்; அது என்ன பாட்டு தெரியுமா?
ஏ.ஆர்.ரகுமான் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹாரிஸ்
1992-ல் இருந்து தொடர்ச்சியாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர்.ரகுமானே வென்று வந்த சூழலில், அதற்கு எண்டு கார்டு போட்டது ஹாரிஸ் ஜெயராஜ் தான். அவர் 2001ம் ஆண்டு மின்னலே படத்துக்காக பிலிம்பேர் விருது வென்று அசத்தினார். தொடர்ந்து 10 ஆண்டுகள் கோலோச்சி வந்த ஹாரிஸ் ஜெயராஜ், பின்னர் படிப்படியாக காணாமல் போனார். அனிருத்தின் வருகைக்கு பின் ஹாரிஸ் ஓரங்கட்டப்பட்டதாக விமர்சனம் எழுந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு அநேகன், என்னை அறிந்தால் என இரண்டு மாஸ் ஹிட் ஆல்பங்களை கொடுத்து கம்பேக் கொடுத்தார் ஹாரிஸ்.
ஹாரிஸின் உலகத் தர ஸ்டூடியோ
ஹாரிஸின் ஸ்பெஷல் குவாலிட்டியே அவரின் இசையமைப்பின் தரம் தான். ஹாரிஸுக்கு சொந்தமான ஸ்டூடியோ H, உலகிலேயே தரத்தில் சிறந்த முதல் 10 ஸ்டூடியோக்களில் ஒன்றாக உள்ளது. சென்னையில் உள்ள இந்த ஸ்டூடியோ சுமார் 18 கோடி செலவில், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த கட்டிட வடிவமைப்பாளர்களை கொண்டு நான்கு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் ஹாரிஸ் முதன்முதலில் இசையமைத்த படம் இருமுகன்.
ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தநாள்
ஏ.ஆர்.ரகுமானும் - யுவன் ஷங்கர் ராஜாவும் கலந்த ஒரு கலவையாக இருந்ததால் தான் ஹாரிஸுக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. தற்போது அதிகப்படியான படங்களுக்கு அவர் இசையமைக்காவிட்டாலும் அவரின் பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. இதனால் மீண்டும் கம்பேக் கொடுங்க ஹாரிஸ் மாம்ஸ் என்பதே ரசிகர்களின் ஏக்கக் குரலாக உள்ளது. இந்த ஆண்டு ஹாரிஸுக்கு கம்பேக் ஆண்டாக அமைய அவரது பிறந்தநாளான இன்று நாமும் வாழ்த்துவோம்.
இதையும் படியுங்கள்... இசையமைப்பாளர் மட்டுமல்ல தியேட்டர் பிசினஸிலும் கொடிகட்டி பறக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் Net Worth இத்தனை கோடியா?