96 படத்தில் திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கெளரி கிஷன், அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பின் போது தன்னிடம் கேலி செய்யும் வகையில் கேள்வி கேட்ட யூடியூப்பரை சரமாரியாக சாடி உள்ளார்.
அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில் உடல்ரீதியாகக் கேலி செய்த யூடியூபருக்கு நடிகை கௌரி கிஷன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். உங்கள் எடை எவ்வளவு என்ற யூடியூபரின் கேள்விக்கு கௌரி கடுமையாகப் பதிலளித்தார். ஒரு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. உடல் எடை குறித்த கேள்வி முட்டாள்தனமானது என்று கூறிய கௌரி ஜி கிஷன், கதாநாயகிகள் அனைவரும் ஒல்லியாக இருக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
கெளரி கிஷான் பதிலடி
அந்த யூடியூபர் தனது கேள்வியை நியாயப்படுத்த முயன்றபோதும், அது ஒரு மோசமான கேள்வி என்று கௌரி மீண்டும் கூறினார். ஆனால், செய்தியாளர் சந்திப்பில் கௌரியுடன் இருந்த இயக்குனர் அபின் ஹரிஹரன் மற்றும் நாயகன் ஆதித்யா மாதவன் ஆகியோர் எதுவும் பேசாமல் மௌனம் காத்தனர். கேள்வி கேட்ட யூடியூபரை சமாதானப்படுத்தவும், பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று கூறவுமே இருவரும் முயன்றனர்.
22
உருவ கேலி செய்த யூடியூபர்
படத்தில் இவரைத் தூக்கும்போது இவருடைய எடை எப்படி இருந்தது என்று அந்த யூடியூபர் சிரித்துக்கொண்டே நாயகனிடம் கேட்டார். இந்தக் கேள்விக்குத்தான் கௌரி கடுமையாகப் பதிலளித்தார். உயரம் குறைவாக இருக்கும் இவரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று இயக்குனரிடமும் அந்த யூடியூபர் கேட்டார். ஒரு போனை வைத்துக்கொண்டு யூடியூபர்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று நினைக்கிறார்கள், நானும் இதழியல் படித்தவள்தான் என்று கௌரி கிஷன் கூறினார்.
கெளரியை பாராட்டிய சின்மயி
எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த யூடியூபர்கள் சொன்னபோது, நான் எதுக்கு கேட்கனும், இந்த மாதிரி கேள்வி கேட்டதற்காக நீங்கள் தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தடாலடியாக பேசினார். சுமார் 50 ஆண்கள் இருந்த அறையில் நான் தனியாகப் பேச வேண்டியிருந்தது, என் குழு உறுப்பினர்கள் கூட எதுவும் பேசவில்லை என்றும் கௌரி கூறினார். இதனிடையே, கௌரியைப் பாராட்டிப் பாடகி சின்மயியும் கருத்து தெரிவித்துள்ளார்.