
தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். இந்த நிலையில், நீயா நானா கோபிநாத் உடன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கலந்துகொண்ட செல்வராகவன், அதில் பான் இந்தியா படங்களின் வரவால் சினிமா எவ்வளவு பின்னடவை சந்தித்துள்ளது என்பதை ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பான் இந்தியா ஒரு அசிங்கமான கல்சர்
அதில் அவர் பேசியதாவது : “பான் இந்தியா என்கிற அசிங்கமான கல்சர் இப்போ வந்திருக்கு. இதனால் இன்றைய சினிமாவில் எல்லாமே கமர்ஷியல் ஆகிடுச்சு. ஒரு குத்துப் பாட்டு இருக்கனும், பயங்கரமா டான்ஸ் ஆடனும், ஃபுல்லா சண்டை போடனும்னு இருந்தா, படத்தின் தரம் என்ன ஆகும். ஒரு நல்ல படம் எப்போ பார்த்தோம்னு யோசித்து பாருங்கள். எல்லாமே முடிஞ்சு போச்சு. எல்லாமே குத்தி குத்தி கிழிச்சிடுறாங்க. இன்றைய சூழலில் நல்ல படம் எடுப்பதற்கு இங்க ஆள் இல்லை.
கிழக்குச் சீமையிலே, மூன்றாம் பிறை மாதிரி படங்களெல்லாம் வந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இப்போதைக்கு படம் ஓடினால் போதும், காசு வந்தா போதும்னு தான் நினைக்கிறார்கள். அதுவும் தவறில்லை. எல்லாருமே காசுக்காக தான் படம் பண்ணுகிறோம். ஆனால் அதுமட்டும் தான் படம் என்கிற நிலைமை வந்துவிட்டது. ரியல் சினிமா வருவது கஷ்டமா இருக்கு. ஆயிரத்தில் ஒரு படம் தான் அப்படி வருது. அதையும் மக்கள் பார்த்து விடுகிறார்கள்.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் ஜீனியஸ்; தனுஷை செதுக்கிய சிற்பி! செல்வராகவன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
5வது நாளே 1000 கோடி போஸ்டர்
எனக்கென்னமோ... இது கொரோனாவுக்கு பின் வந்த மாற்றமாக தான் தெரிகிறது. இப்போ எல்லாரும் ஆயிரம் கோடி வேணும் என படம் எடுக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆன 5வது நாள் ஆயிரம் கோடினு போட்டுவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அது உண்மையிலேயே வசூலித்ததா என்பதெல்லாம் கிடையாது. பெரும்பாலானவர்கள் ஹீரோவை சந்தோஷப்படுத்தவே செய்யப்படுகிறது. அவர்களை சந்தோஷப்படுத்தினால் அடுத்த படம் கொடுப்பார்.
நல்ல சினிமா செத்து போச்சு. இனிமே ஒரு நல்ல சினிமாவோ அல்லது பாரதிராஜா போன்ற இயக்குனர்களோ வர முடியாது. ஏனெனில் இங்கு ஒரு படம் எடுத்தால் சர்வைவ் ஆக முடியாது. இப்போது 99 சதவீத படங்கள் அப்படி தான் எடுக்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் மக்கள் 2 வருஷமா வீட்டுக்குள்ளேயே இருந்து அவர்களுக்கு மூளை என்னமோ ஆகிடுச்சு. இதை நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. என்னுடைய ஆயுள்காலம் முடியும் வரை நல்ல படங்கள் வராது.
ரசனை செத்து போச்சு
பான் இந்தியா படங்கள் மீது எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு படம் தமிழ்லையும் கிளிக் ஆகணும், தெலுங்குலையும் கிளிக் ஆகணும், மலையாளத்திலும் கிளிக் ஆகணும் என விரும்பினால் இந்த மாதிரி படங்கள் தான் வரும். கமர்ஷியலா எடுத்தா எல்லாரும் பார்த்துவிடுவார்கள் என நம்பி தான் பான் இந்தியா படங்களை எடுக்கிறார்கள். எல்லா பான் இந்தியா படங்களிலும் 4 பாடல்கள் இருக்கும். அதில் முக்கால்வாசி ஹீரோயினே ஆடிவிடுவார்கள்.
பான் இந்தியா படங்களில் கலை நயம் இருப்பதுபோல் தெரியவில்லை. இந்த பான் இந்தியா மோகத்தால் இந்தியில், பாலிவுட் படங்களையே மறந்துவிட்டார்கள். அங்கேயே நம் தென்னிந்திய படங்களை தான் பார்க்க விரும்புகிறார்கள். அங்கு இன்று டாப்பில் இருப்பவர்கள் எல்லாம் இங்கிருந்து சென்றவர்கள் தான். பான் இந்தியா படங்களால் ரசனை செத்துப் போச்சு” என ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் செல்வராகவன்.
இதையும் படியுங்கள்... Selvaraghavan: விளங்கவே விளங்காது; யார் கிட்டையும் உதவி கேட்காதீங்க - தீர்க்க தரிசியாக மாறிய செல்வராகவன்!