தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நிலையில் அந்த பாதுகாப்பு அமலுக்கு வரும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு அதிகளவில் பேசப்பட்டு வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி கட்சி ஆரம்பித்த விஜய், விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். மேலும், தொடர்ந்து திமுகவையும், திமுகவின் ஆட்சியை விமர்சித்து வருகிறார். அதோடு பெண்களின் பாதுகாப்பையும் வலியுறுத்தி வருகிறார்.
24
சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் விஜய்
வரும் 2026 ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியே தனது அரசியல் ஆளுமையை விஜய் மேற்கொண்டு வருகிறார். இதற்காக சினிமாவையும் தூக்கி எறிந்தார். அரசியல் வருகை காரணமாக இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் முடிவெடுத்திருக்கிறார் தளபதி விஜய். தற்போது தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாசன், பிரியாமணி, நரைன், மமிதா பைஜூ, மோனிஷா பிளெசி, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த ஆண்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படம், 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் தளபதி விஜய்யின் பாதுகாப்பு கருதி அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் எப்போது முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
44
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு
இந்த நிலையில் தான் மார்ச் 14ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக அச்சுறுத்தல் எழுந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. இதற்கு முன்னதாக விஜய்க்கு வெளிநாட்டு பவுன்சர்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர். இனிமேல் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்களின் பாதுகாப்பும் இருக்கும். விஜய்யின் Y பிரிவில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். அவருக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கப்படும். இந்த பாதுகாப்பு, தமிழகத்தில் இருக்கும் போது மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.