தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 20 ஆண்டுகளாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார். தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா இருக்கிறார்.
தனது நடிப்புத்திறமைக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதே போல் மற்ற மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் ஹீரோயினை மையப்படுத்தி வெளியான ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், அறம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
Nayanthaara
நயன்தாரா நாட்டின் பணக்கார பெண் நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய். அவருக்கு ரூ. 100 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது, இது தமிழ்நாடு முதல் மும்பை வரையிலான அவரது நான்கு ஆடம்பர வீடுகளில் ஒன்றாகும். தற்போது, சென்னையில் அவர் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 BHK பிளாட் ஒன்றில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டில் ஒரு தனியார் திரையரங்கம், நீச்சல் குளம் மற்றும் ஜிம் போன்ற பிரத்யேக வசதிகள் உள்ளன. மேலும் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் நயன்தாராவுக்கு இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை.
மேலும் நயன்தாராவிடம் விலை ஆடம்பர கார்களும் உள்ளன. குறிப்பாக ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார். தனியார் ஜெட் விமானம் வைத்திருக்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். ஷில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா மற்றும் மாதுரி தீட்சித் போன்ற பாலிவுட் நடிகைகளை தவிர, நயன்தாராவிடம் சொந்தமாக ரூ. 50 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானமும் உள்ளது.
தனது கணவர் விக்னேஷ் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்பு ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது.