கொரோனாவால் பிரம்மாண்ட நடக்கவேண்டிய பல பிரபலங்களின் திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சத்தமில்லாமல் வீட்டிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி பொது இடத்தில் நடத்தப்பட்டாலும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர்.
அந்த வரிசையில் தெலுங்கு நடிகர்கள் பாகுபலி வில்லன் ராணா, நிதின், மாமங்கம் நடிகை பிராச்சி தெஹலான், பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகை மியா ஜார்ஜ் ஆகியோர் அடக்கம். தற்போது பிரபல இளம் இயக்குநர் ஒருவரும் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் பாக்கியயராஜ் கண்ணன். முதன் முறையாக சிவகார்த்திகேயன் பெண் வேடம் ஏற்று நடித்த இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தையும் இயக்கி உள்ளார். சுல்தான் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று சுல்தான் பட ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி தாறுமாறு வைரலானது.
இதற்கிடையில் பாக்கிய ராஜ் கண்ணனுக்கும் ஆஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமண விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில்,பாக்கிய ராஜ்- ஆஷா தம்பதிக்கு வாழ்த்துக்கள். திருமண வாழ்வு என்ற பயணத்தைத் தொடங்கி உள்ளீர்கள். இது ஒரு புது பயணம் அதில் இருவரும் அன்போடு இணைந்திருங்கள். புரிதலும் ஒருவருக்கொருவர் அதிக அன்பு காட்டியும் கடவுள் ஆசியுடன் வாழ வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.