
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அடிமேல் அடி விழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களெல்லாம் தொடர்ந்து சொதப்பிய வண்ணம் உள்ளன. அதையும் மீறி சில படங்கள் எதிர்பாரா வெற்றியை ருசித்து நம்பிக்கை அளித்து வருகிறது. இந்த ஆண்டு மொத்தமே 6 தமிழ் படங்கள் தான் 100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கின்றன. அதில் இரண்டு படங்கள் அஜித் நடிப்பில் வெளியானது. மற்ற நான்கு படங்களில் சூர்யா, கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் படங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை. இந்த ஆண்டு 100 கோடி வசூல் அள்ளிய டாப் 5 படங்கள் பற்றி பார்க்கலாம்.
2025-ம் ஆண்டு முதன்முதலில் 100 கோடி வசூல் அள்ளிய படம் என்றால் அது அஜித்தின் விடாமுயற்சி தான். கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.137 கோடி வசூலித்திருந்தது. இம்புட்டு வசூல் செய்திருந்தாலும் இது தோல்விப் படமாகவே அமைந்தது.
விடாமுயற்சியை தொடர்ந்து 100 கோடி வசூல் என்கிற இமாலய வசூல் சாதனையை எட்டிய படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கயாடு லோகர், அனுபமா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸீல் ரூ.151 கோடி வசூல் செய்திருந்தது.
இதையடுத்து ஏப்ரல் மாதம் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தான் 100 கோடி வசூல் அள்ளி இருந்தது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் ரிலீஸ் ஆகி உலகளவில் 243 கோடி வசூலித்திருந்தது.
அடுத்ததாக 100 கோடி என்கிற மைல்கல் சாதனையை எட்டிய படம் என்றால் அது தனுஷின் குபேரா தான். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நாகர்ஜுனா நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.135.76 கோடி வசூலித்து இருந்தது.
பின்னர் இந்த 100 கோடி பட்டியலில் இணைந்த படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே ரூ.151 கோடி வசூலித்தது. தற்போது இரண்டு வாரங்களை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் இப்படம் ரூ.475 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.
லேட்டஸ்டாக 100 கோடி கிளப்பில் இணைந்துள்ள படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்ததால், இது ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னும் திரையரங்கில் வெற்றிநடைபோட்டு ரூ.100 கோடி வசூலை நேற்று எட்டி சாதனை படைத்தது.