பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தன் தந்தையைப் போலவே தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காமல் தவித்து வந்த சிம்புவுக்கு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுத்தந்தது.
சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றியை ருசித்துள்ள சிம்புவுக்கு, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அதிகரித்துள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள சிம்பு, தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.
இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.
இதையடுத்து ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இப்படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா இயக்க உள்ளார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், வருகிற பிப்ரவரி 3-ந் தேதி பிறந்தநாள் காண உள்ள சிம்பு, அன்றைய தினம் ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்க உள்ளாராம். அதன்படி வெந்து தணிந்தது காடு படத்தின் சிங்கிள் டிராக் அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டும் அன்று வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.