கமல் இல்ல.. சிவாஜியும் இல்ல - கோலிவுடில் முதன் முதலில் 10 கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் யார் தெரியுமா?

First Published | Sep 30, 2024, 7:34 PM IST

Kollywood Cinema : உண்மையில் ஒரு படத்தில் 2 அல்லது 3 கதாபாத்திரங்களில் நடிப்பதே பெரிய விஷயம் என்றாலும், வெகு சில நடிகர்கள் 10 கதாபாத்திரம் வரை ஏற்று நடித்து அசத்தியுள்ளார்.

Sivaji Ganesan

சவாலான திரைக்கதையை மக்கள் பெரிதும் விரும்பும் வண்ணம் ஜனகராஜ்ஜகமாக கொடுத்து வரும் வழக்கம் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அதில் குறிப்பிட்ட ஒரு விஷயம் தான் அப்படத்தில் நடிக்கும் ஹீரோவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது. உண்மையில் இந்த விஷயம் தமிழ் சினிமாவிற்கு புதிது அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எம்ஜிஆர் காலம் தொடங்கி இப்போது சிவகார்த்திகேயன் வரை அனைத்து நடிகர்களும் டூயல் ரோல் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கின்றனர். 

அதிலும் குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் "தசாவதாரம்" என்ற திரைப்படத்தில் 10 வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அப்படத்தை மாபெரும் ஹிட் திரைப்படமாக மாற்றினார். ஆனால் 10 கதாபாத்திரங்கள் என்று நடிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடித்து விடும் விஷயமல்ல. காரணம் அவர்கள் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இடையே சில உடல் ரீதியான மாற்றங்களை செய்ய வேண்டும்.

சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்; குற்றங்களை அடுக்கும் ஜெயம் ரவி.. சமாதான கொடி தூக்கிய ஆர்த்தி!

Sivaji Ganesan and kamal

கமல்ஹாசன் போன்ற மிக நேர்த்தியான நடிகர்களுக்கே அது மிகவும் கடினமான ஒரு விஷயம் என்றால் அது மிகையல்ல. ஆனால் உலகநாயகன் கமல்ஹாசனின் "தசாவதாரம்" திரைப்படம் வெளியாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, கடந்த 1964ம் ஆண்டு வெளியான "நவராத்திரி" என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதாவது நவரசங்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் அந்த கதாபாத்திரங்களை வடிவமைத்து இருப்பார் அப்படத்தின் இயக்குனர் ஏ.பி நாகராஜன். 

நடிகையர் திலகம் சாவித்திரி வீட்டில் இருந்து காணாமல் போய், 9 நாட்கள் கழித்து மீண்டும் அவருடைய இல்லத்திற்கு சென்றடைவார். இந்த 9 நாட்கள் அவர் வீட்டை விட்டு வெளியே பயணம் செய்யும் நேரத்தில் அவர் சந்திக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் சிவாஜி கணேசனால் நடிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது.

Latest Videos


PU Chinnappa

ஆனால் தமிழ் திரையுலகில் கமல் மற்றும் சிவாஜி கணேசனுக்கு முன்பே ஒரு நடிகர் 10 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். அவர் பெயர் தான் பி.யூ.சின்னப்பா. நிச்சயம் இக்கால இளைஞர்களுக்கு அவரை பற்றிய தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் 1936ம் ஆண்டு துவங்கி 1951ம் ஆண்டு வரை அவர் தான் டாப் நடிகர். இவருடைய படங்களை பார்க்கவே மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்க சென்ற காலங்களும் உண்டு. 

அப்படிப்பட்ட நடிகர் பி.யு சின்னப்பா தான், கடந்த 1941 ஆம் ஆண்டு வெளியான "ஆரியமாலா" என்ற திரைப்படத்தில் பத்து கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். எம்.ஆர் சந்தானலட்சுமி, டி.எஸ் பாலையா, என்.எஸ் கிருஷ்ணன், பி.ஏ மதுரம், எஸ்.ஆர் ஜானகி போன்ற பல முக்கிய முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

PU Chinnappa and MKT bhagavathar

அது மட்டுமல்ல தமிழ் திரையுலகை பொருத்தவரை கடந்த 1940ம் ஆண்டு வெளியான "உத்தமபுத்திரன்" என்கின்ற திரைப்படத்தில் இரட்டை வேடங்களிலும், 1949ம் ஆண்டு வெளியான "மங்கையர்கரசி" என்ற திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களும் ஏற்று நடித்து அசத்தியவர் பி.யு சின்னப்பா. இறுதியாக கடந்த 1951 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சுதர்சன்" என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். புதுக்கோட்டையை சேர்ந்த இவருடைய இயற்பெயர் புதுக்கோட்டை உலகநாதன் சின்னசாமி பிள்ளை என்பதாகும். 

1916ம் ஆண்டு பிறந்த பி.யு சின்னப்பா இயல்பிலிருந்து பீடி குடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார் என்று கூறப்படுகிறது. அவருக்கு குடிப்பழக்கமும் இருந்த நிலையில் கடந்த 1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி "மணமகள்" என்கின்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது நண்பர்களோடு இல்லத்திற்கு திரும்பி இருக்கிறார். அப்பொழுது திடீரென ரத்த வாந்தி எடுத்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்திருக்கிறார். பி.யு சின்னப்பாவின் இறப்பிற்கு அவருடைய பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடியது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் எம்.கே தியாகராஜ பாகவதர்க்கு அடுத்த நிலையில் இருந்த ஒரு டாப் நடிகர் சின்னப்பா தான்.

சிக்கலில் சிக்கிய சங்கரின் படம்.. துணை நின்று ரிலீசுக்கு உதவிய ஜெயலலிதா - எந்த படம் தெரியுமா?

click me!