
எத்தனையோ இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், ஒரு சிலரின் இசை மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கிறது. அந்த வகையில்... சுமார் மூன்று தலைமுறைகள் ரசிக்கும் வகையில்... குறிப்பாக இளவட்ட ரசிகர்களையும் கவரும் விதமான பாடல்களை கொடுத்து, மேஜிக் செய்து வருபவர் இசைஞானி இளையராஜா. துக்கம்... முதல் தூக்கம் வரை ஏராளமான ரசிகர்கள் தேடுவதும் இவரது இசையை தான்.
90-களில் இசைஞானி இளையராஜா பாடல்கள் ஒளிபரப்பப்பட்டும் பேருந்துகளில் தான் ஏராளமான பயணிகள் பயணிப்பார்கள். ஒரு சிலர் இளையராஜா பாட்டு போடுவீர்களா? என கேட்டுக்கொண்டு தான் பேருந்தில் ஏறுவது வழக்கம். அந்த அளவுக்கு தன்னுடைய இசையால் ரசிகர்களை மயக்கி... அவர்கள் மனதில் சிம்மாசம் போட்டு அமர்ந்திருந்தார் இசைஞானி. தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிபடங்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜா ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதே போல் வெளிநாட்டிலும் இவரது இசைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் எப்படி இளையராஜா இசை கச்சேரி நடக்கிறது என்றால் ரசிகர்கள் கூட்டம் கூடி விடுமோ... அதே போல், வெளிநாடுகளில் இசைஞானி இசை கச்சேரி என்றால், 10,000 ரூபாய் டிக்கெட்டின் விலை என்றாலும் ரசிகர்கள் வாங்கி நிகழ்ச்சியை கண்டு ரசிப்பார்கள்.
இதுவரை சுமார் 1000-திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜா, ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார். சமீபத்தில் கூட தான் இசையமைத்த பாடல்கள் தனக்கே சொந்தம் என இளையராஜா உரிமை கோரிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்க்கு பலர் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். ஆனால் எதை பற்றியும் அலட்டி கொள்ளாமல்.. 40 நாட்களில் தான் ஒரு சிம்பொனி தயார் செய்து விட்டதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சிம்பொனி என்பது இதுவரை எந்த ஒரு படத்திலும்... பாடலிலும் பயன்படுத்தாத தனித்துவமான இசை ஆகும். கூடிய விரைவில் இளையராஜா இந்த இசையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, இளையராஜா இசையில் உருவான பாடல் ஒன்றை பாட முடியாமல் பிரபல பாடகி ஒருவர் ஸ்டுடியோவிலேயே அழுத தகவல் வெளியாகியுள்ளது. பல வருடங்களாக தன்னுடைய மென்மையான குரலால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமானவர் தான் பிரபல பாடகி ஜானகி. இவரை பொறுத்தவரை ஒரு ஸ்டூடியோவில் பாடும்போது எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் அல்ல. அதற்க்கு முக்கிய காரணம் அவரின் அனுபவமும் ஒன்று. ஆனால் இவரையே அசைத்து பார்த்து விட்டது, இளையராஜா இசையில்... உருவான 'மாதாவின் கோவிலில்' என்கிற பாடல்.
1978 ஆம் ஆண்டு, தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அச்சாணி. காரைக்குடி நாராயணன் எழுதி - இயக்கி இருந்த இந்த படத்தில் முத்துராமன் ஹீரோவாக நடிக்க, லட்சுமி ஹீரோயினாக நடித்திருந்தார். அசோகன், கே ஏ தங்கவேலு, ஸ்ரீகாந்த், சுருளி ராஜன், மனோரமா, சோபா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஜானகி பாடிய 'மாதா உன் கோவிலிலே' பாடல் தற்போது வரை கோவில் திருவிழாக்களில் ஒளிபரப்பப்படும் பாடலாக உள்ளது.
இந்த பாடல் நான் கடவுள் திரைப்படத்திலும், பயன்படுத்தப்பட்டிருந்தது. பேட்டி ஒன்றில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இந்த பாடல் குறித்து பேசும் போது... குலாம் அலி இயற்றிய "அவர்கி" என்ற கஜலால் ஏற்பட்டு இந்த பாடல் உருவானதாகவும், 3 மணி நேரத்தில் இந்த பாடல் உருவானதாகவும் கூறி இருந்தார்.
வாலி எழுத்தில் உருவான இந்த பாடல், இளையராஜாவின் மியூசிக் ஸ்டுடியோவில்... ஜானகி குரலில் ரெகார்ட் செய்யப்படும் போது, அவர் இசைஞானியின் இசையாலும்... பாடல் வரிகளாலும் உணர்ச்சிவசப்பட்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பின்னர் ரெக்கார்டிங்கை நிறுத்தப்பட்டு, இளையராஜா ஜானகிக்கு சில மணி நேரங்கள் ஓய்வு கொடுத்து, மீண்டும் இந்த பாடலை ரெக்கார்டு செய்துள்ளார். இந்த பாடல் பாடும் போது எப்படி ஜானகி கண்ணீர் விட்டு அழுதாரோ... அதே போல் இந்த பாடலை கேட்டு, அச்சாணி படம் பார்த்த பலர் கண்கலங்கினர். இதுவே இந்த பாடலின் மிகப்பெரிய வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.