பைசன் படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ் முதிர்ச்சியான அரசியலைப் பேசி இருப்பதாக நேரில் அழைத்து பாராட்டி அகமகிழ்ந்தார். நல்ல படங்களை வரவேற்பது தவறு இல்லை என்றாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய விமர்சனத்தையும் புறம்தள்ளிவிட்டுப் போக முடியாது. கனமழை கொட்டித் தீர்க்கும்வேளையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லை பிடித்திருக்க வேண்டிய கைகள், பைசன் பட குழுவினரின் கைகளை பிடித்துக் கொண்டு இருப்பதாக விமர்சனம் செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜெய் பீம் படம் பார்த்து உள்ளம் குளிர்ந்து போனவர், தனது ஆட்சிக்கு கீழ் தொடர்கதையாக உள்ள அஜித் போன்ற லாக்கப் மரணங்களை தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இப்படித்தான் தூய்மை பணியாளர்களை குண்டுக் கட்டாக கைது செய்யும்போது கூலி படத்தை பார்த்துக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின் என காட்டமாக கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்தோடு இன்னும் பல கேள்விகளும் எழுந்துள்ளது. சாதி ஒழிப்பு பேசும் பைசன் படத்தைப் பார்த்து பாராட்டும் வேளையில் திமுகவின் அமைச்சர்கள் சாதி சங்க மாநாடுகளில் பங்கேற்பதையோ, சுயசாதி பெருமை பேசுவதையோ யாரும் தடுத்தது போல் தெரியவில்லை. ஒரு பக்கம் சாதியின் பெயரால் நிகழும் வன்முறைகளை தடுக்க வேண்டிய இடத்தில் இருந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் படத்தைப் பார்த்து பகுமானமாக பாராட்டுவதில்தான் எத்தனை முரண்? இது ஒரு பக்கம் இருக்க திமுகவின் கூட்டணி கட்சியினரும் சொல்லி வைத்தது போல பைசன் படத்திற்கு சென்று பாராட்டித்தள்ளி இருக்கிறார்கள்.