திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.
குறிப்பாக, புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில் ரசிகர்களின் வருகை அதிகமாக இருப்பதால், கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், காலை 6 மணி முதல் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு புதிய நடைமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளதாக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இருந்த நடைமுறை என்ன?
கடந்த 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் விதிகளின்படி, திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிமத்தின் நிபந்தனை 14A அடிப்படையில், தினமும் நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி இருந்து வந்தது.
இதற்கிடையில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஏழு நாட்களுக்கு ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகைகள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஐந்து காட்சிகள் வரை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது திரைப்படத் துறையினரின் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, இந்த எண்ணிக்கையை ஆறாக உயர்த்தியுள்ளது. இதனால் புதிய படங்களின் முதல் வார வசூலுக்கும், திரையரங்குகளின் வருவாய்க்கும் சாதகமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.