
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். கியாரா அத்வானி, எஸ்.ஜே,சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, ஸ்ரீகாந்த் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் எப்படி உள்ளது, கதை என்ன, சங்கர் மீண்டும் வெற்றி பெற்றாரா, படம் உண்மையிலேயே அன்ப்ரெடிக்டபிளாக உள்ளதா போன்ற விஷயங்களை விமர்சனத்தில் காண்போம்.
கதை
ராம் நந்தன் (ராம் சரண்) தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார். நேர்மையே வாழ்க்கையாக கொண்ட இந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆவேசம் அதிகம். பதவியேற்ற உடனே ஊழல்வாதிகள் மீது ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்க தொடங்குகிறார். இது ஊழலில் மூழ்கியிருக்கும் அமைச்சர் பாப்பிலி மோப்பிதேவிக்கு (எஸ்.ஜே. சூர்யா) பிடிக்கவில்லை.
எனவே தனது ஒவ்வொரு செயலுக்கும் தடையாக இருக்கும் ராம் நந்தனை ஒழிக்க முடிவு செய்கிறார் மோப்பிதேவி. அதிகாரத்திற்காக தனது தந்தையான ஆந்திர முதல்வர் சத்தியமூர்த்தியையே (ஸ்ரீகாந்த்) கொல்ல துணிகிறார். ஆனால் மகனை நன்கு அறிந்த சத்தியமூர்த்தி, எதிர்பாராத விதமாக ராம் நந்தனை தனது வாரிசாக அறிவிக்கிறார். இது கட்சியில் யாருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக மோப்பிதேவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
ராம் நந்தன் முதல்வராக வருவதை தடுத்து நிறுத்தி, தானே முதல்வராகிறார் மோப்பிதேவி. ஆனால் ராம் நந்தன் விடுவதாக இல்ல. அவரும் மோப்பிதேவிக்கு பதிலடி கொடுக்கிறார். அங்கிருந்து இருவருக்கும் இடையே நேரடி போர் தொடங்குகிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும், ஊழல்வாத அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் இந்த போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் ராம் நந்தன் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே படத்தின் ட்விஸ்ட். அது எப்படி நடந்தது, ராம் நந்தன் யார்? அவரது ஃப்ளாஷ்பேக் என்ன? திடீரென்று ராம் நந்தனை ஏன் சத்தியமூர்த்தி முதல்வராக அறிவித்தார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை உடன் கூறிய படம் தான் கேம் சேஞ்சர்.
விமர்சனம்
இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அரசியல் கதைகளையே அதிகம் இயக்கி இருக்கிறார். அதேபோல் அவர் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு சமூக நோக்கம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். அதுவே அவரை ஒரு தனித்துவமான இயக்குநராக நிறுத்தியுள்ளது. இந்த முறை தெலுங்கில் நேரடி படம், ராம் சரணுடன் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த விஷயம் அவருக்கு தெரியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை.
இந்த படத்தின் கதையும் எளிதில் யூகிக்கக் கூடியதாக உள்ளது. கதை எப்படி இருந்தாலும், திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த படத்தில் கதையும், திரைக்கதையும் மிகவும் மந்தமாக நகர்கின்றன. குறிப்பாக முதல் பாதி நாயகனுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மிகவும் பேசிக்கொண்டே இருப்பதால் எந்த வித ஈர்ப்பும் இல்லை. பிரம்மாண்டம் கவர்ந்திழுத்தாலும், கதை சுவாரஸ்யமாக இல்லை.
இரண்டாம் பாதியில் அமைச்சருக்கும், ஐஏஎஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதலை மையப்படுத்து நகர்கிறது. இதிலும் எதிர்பாராத திருப்பங்கள் ஏதும் இல்லை. பரபரப்பூட்டும் காட்சிகளும் படத்தில் மிக குறைவு. இதுபோன்ற பெரிய படங்களில் பரபரப்பூட்டும் காட்சிகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். அவையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவை இல்லை. முதல்வன், சிவாஜி போன்ற ஷங்கரின் படங்கள் ஆங்காங்கே நினைவுக்கு வருகின்றன.
படத்தில் சங்கரின் தனித்தன்மை தெரிவது காட்சி அமைப்புகளிலும், இரண்டாம் பாதியில் வரும் அப்பண்ணா பிளாஷ்பேக் காட்சிகளிலும் தான். ஷங்கர் படங்களில் காணப்படும் எமோஷனல் கனெக்ட் இதில் மிஸ்சிங். கதை நம் மனதை தொடவில்லை. நாயகன் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்ச்சியை நம்முள் தூண்டவில்லை. அந்நியன், ஜென்டில்மேன், முதல்வன் போன்ற படங்களின் மேஜிக் எங்கே என்று தோன்றுகிறது.
பாசிடிவ்
பாடல்கள்
பிரம்மாண்ட காட்சியமைப்பு.
ராம் சரணின் நடிப்பு
அப்பண்ணா பிளாஷ்பேக் காட்சிகள்
நெகடிவ்
பழைய கதை
மந்தமான திரைக்கதை
கியாரா அத்வானி, ராம் சரண் இடையேயான காதல் காட்சிகள்
எமோஷனல் கனெக்ட் இல்லை
தொழில்நுட்ப அம்சங்கள்
ஷங்கர் போன்ற இயக்குநரின் படத்தில் தொழில்நுட்ப அம்சங்களில் குறை இருக்காது. ஒளிப்பதிவாளர் திரு சிறப்பான பணியை செய்துள்ளார். ஷங்கரின் தனித்தன்மையுடன் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக தெரிகிறது. தமனின் பாடல்களை விட பின்னணி இசை சிறப்பாக உள்ளது.
ஜருகண்டி, ரா மச்சா பாடல்களுக்கு நல்ல வரவேற்பு. நானா ஹைராணா பாடல் படத்தில் இல்லை. படத்தொகுப்பாளர் எந்த சலிப்பும் இல்லாமல் வேகமாக நகர்த்தியுள்ளார். ஆனால் கதையிலேயே சலிப்பும், ரொட்டீனும் இருப்பது தான் பிரச்சனை. வசனங்கள் சில இடங்களில் சிறப்பாக உள்ளன. குறிப்பாக வில்லன் எஸ்.ஜே. சூர்யாவுக்கு எழுதப்பட்ட வசனங்கள் நன்றாக உள்ளன. தில் ராஜுவின் தயாரிப்பில் குறை இல்லை.
நடிப்பு
ராம் சரண் தந்தை, மகன் என இரண்டு வேடங்களிலும் நடிகராக தன்னை நிரூபித்துள்ளார். கியாரா அத்வானிக்கு (kiara advani) சொல்லிக்கொள்ளும்படி ஏதும் இல்லை. பாடல்களில் வந்து போகிறார். பார்வதியாக அஞ்சலிக்கு நல்ல பாத்திரம். அவரது ஒப்பனையும் வித்தியாசமாக உள்ளது.
மோப்பிதேவியாக எஸ்.ஜே. சூர்யா (SJ Surya) மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு மீண்டும் தனது வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார். ஸ்ரீகாந்தின் தோற்றம் வித்தியாசமாக உள்ளது. ஜெயராம், சமுத்திரக்கனி, ராஜீவ் சராசரி நடிப்பு. சுனிலின் துணை பாத்திரம் நன்றாக உள்ளது. பிரம்மானந்தம் சிறப்பு தோற்றம். பிரித்வி, ரகுபாபு இருக்கிறார்கள் அவ்வளவு தான்.
ரிசல்ட்
ஷங்கர் போன்ற இயக்குநருக்கு சுஜாதா போன்ற எழுத்தாளர் மீண்டும் கிடைக்காதது எவ்வளவு பெரிய இழப்பு என்பது இந்த படத்தின் மூலம் மறுபடியும் புரிகிறது. திரைக்கதை சரியில்லை என்றால் யார் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு அளவுக்கு தான் படம் நிற்கும். மாற்றம் ஏற்படும் அளவுக்கு அதிசயங்கள் நடக்காது.
மதிப்பீடு : 2.5/5