தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்று தான் எந்திரன். கடந்த 2010-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து இருந்தார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இந்திய சினிமாவிலேயே ஒரு மைல்கல் திரைப்படமாக எந்திரன் பார்க்கப்பட்டது. இப்படம் தான் தற்போது இயக்குனர் ஷங்கருக்கு தலைவலியாக மாறி இருக்கிறது.
24
Enthiran Director Shankar
எந்திரன் திரைப்படம் தான் எழுதிய ஜுகிபா என்கிற கதையை திருடி எடுக்கப்பட்டதாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜுகிபாவுக்கும் எந்திரன் படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதாக நீதிமன்றமே தெரிவித்ததால் அதை எதிர்த்து ஷங்கர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை காரணம் காட்டி இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
அமலாக்கத்துறையின் இந்த செயலுக்கு இயக்குனர் ஷங்கர் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், “சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இருந்து எந்தவித தகவலும் எனக்கு அளிக்கப்படவில்லை. எந்திரன் படம் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கையால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
44
Director Shankar Condemns ED
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். அத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை தொடர்பாக மறு பரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். ஒரு வேளை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்” என இயக்குனர் ஷங்கர் பேசி உள்ளார். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.