நாடக பாணியிலான திரைப்படங்கள் வந்துகொண்டிருந்த காலத்தில், இயல்பான காட்சிகள், வியக்கவைக்கும் திரைக்கதை, எதார்த்தமான நடிகர்கள் என தமிழ் சினிமாவுக்கு தனது படங்கள் மூலம் புது ரத்தம் பாய்ச்சியவர் இயக்குனர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய இவர் ஒரு இயக்குனராக மட்டுமின்றி திரைக்கதை, வசனகர்த்தா, நடிகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கினார்.
நகைச்சுவை என்ற பெயரில் பிறரை மட்டம் தட்டி பேசுவதோ, இரட்டை அர்த்த வசனங்களோ இவரது படத்தில் இடம்பெற்றதே இல்லை என்பது கூடுதல் சிறப்பு. முள்ளும் மலரும் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மகேந்திரன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் ஆவார். இவரது நிஜப்பெயர் ஜெ.அலெக்சாண்டர் ஆகும்.
25
ஒரு கல்லூரி விழாவின் போது எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானார் மகேந்திரன். அந்த விழாவில் மகேந்திரன் பேச்சால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். அங்கேயே அவரை பாராட்டினார். பின்னர் கல்லூரி படிப்பை முடித்து திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற முயற்சித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவரை கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு மகேந்திரனிடம் எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டார்.
மாத சம்பளம் பெற்று அதற்கான வேலைகளை ஆரம்பித்த மகேந்திரனால், அந்த பணியை முடிக்க இயலவில்லை. இருப்பினும் அதைப்பற்றி கேட்காமல் மகேந்திரனுக்கு தொடர்ந்து பண உதவி செய்து வந்தார் எம்.ஜி.ஆர். இந்த நிலையில், தான் நடித்து வந்த காஞ்சித்தலைவன் என்கிற படத்தின் இயக்குனர் காசிலிங்கத்திடம் மகேந்திரனை உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர்.
35
இதைத்தொடர்ந்து ஜெய் சங்கர் நடிப்பில் வெளிவந்த நாம் மூவர் என்கிற படத்திற்கு முதன்முதலில் கதை எழுதினார் மகேந்திரன். இதன்பின்னர் ஏராளமான படங்களுக்கு கதை, வசனம் எழுதி வந்த மகேந்திரனுக்கு 1974-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜியின் தங்கப்பதக்கம் திரைப்படம் ஒரு மிகப்பெரிய அடையாளத்தை தந்தது.
1978-ம் ஆண்டு ரஜினியின் முள்ளும் மலரும் படம் மூலம் இயக்குனர் அந்தஸ்தை பெற்றார் மகேந்திரன். தமிழ் சினிமாவை திசைதிருப்பிய படங்களில் இப்படம் முக்கிய பங்கை கொண்டதாகும். ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய மகேந்திரன், இறுதியாக பேட்ட படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருந்தார்.
முள்ளும் மலரும் படத்தை தொடர்ந்து மகேந்திரன் இயக்கிய மற்றொரு காவியம் உதிரிப் பூக்கள், தமிழ் சினிமாவில் காலத்தை கடந்து கொண்டாடப்படும் கிளாசிக் திரைப்படமாகும். ஒரு கமர்ஷியல் படத்தை எப்படி நேர்த்தியாகவும், அழுத்தமான கதையுடன் சொல்ல வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டு தான் இவர் இயக்கிய ஜானி.
இதனைத் தொடர்ந்து பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, மெட்டி, சாசனம் போன்ற திரைப்படங்கள் என்றும் இவர் பெயர் சொல்லும் காவியங்களாக அமைந்தன. இந்த படங்கள் அனைத்தும் சினிமாவை பற்றி தெரிந்துகொள்பவர்களுக்கு ஒரு பாடமாகவே இருந்து வருகிறது என்றே கூறலாம். தனது படங்களில் பெண்களுக்கு மகேந்திரன் அளித்த மதிப்பும் மரியாதையும் மகத்தானது.
55
தேசிய விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்ற மகேந்திரன் கடைசியாக இயக்கிய படம் சாசனம். 2006-ம் ஆண்டு வெளிவந்த இப்படத்திற்கு பின் இயக்கத்திற்கு ஓய்வு தந்த அவர், 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார். இவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருக்கிறாரா என ஆச்சரியப்படும் அளவுக்கு அப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.
அவர் வாழ்நாளில் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 12. அதில் அவருக்கு இரு தூண்களாக இருந்தது இசையமைப்பாளர் இளையராஜாவும், ஒளிப்பதிவாளர் அசோக் குமாரும் தான். இத்தகைய அறிய படைப்புகளை கொடுத்த மகேந்திரனின் பிறந்த தினம் இன்று.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.