நடிகர் சூர்யா திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில், இயக்குனர் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா, பிதாமகன் ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
காதல், ரொமான்ஸ் என ரொமான்டிக் பாய்யாகவே பார்க்கப்பட்ட சூர்யாவால் இப்படியும் நடிக்க முடியும் என, அவரது நடிப்பு திறமையை ரசிகர்கள் முன் கொண்டு வந்து நிறுத்திய பெருமை பாலாவையே சேரும்.
இந்த இரு படங்களுக்கு பின், கடந்த 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'மாயாவி' படத்தை பாலா தயாரித்திருந்தார். ஆனால் கடந்த 20 வருடங்களாக சூர்யா மற்றும் பாலா கூட்டணி இணையவே இல்லை.
இந்நிலையில் பாலா இயக்கத்தில் மீண்டும் சூர்யா இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாமல் இருந்தது.
இந்நிலையில் சற்று முன்னர் நடிகர் சூர்யா, மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க உள்ள தகவலை உறுதி செய்துள்ளார்.
தன்னுடைய தந்தை மற்றும் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சூர்யா போட்டுள்ள பதிவில், "என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்... அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சூர்யா நடித்து முடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடி வாசல்' ஆகிய படங்களில் நடித்து முடித்த பின்னர், பாலா இயக்கத்தில் டிசம்பர் மாதத்தில் இருந்து சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா மற்றும் பாலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் பல மடங்கு எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.