இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கமலேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், "2023-ம் ஆண்டு ரேவணசித்தப்பா எதிர் மல்லிகார்ஜுன் வழக்கின் தீர்ப்பின்படி, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் ஒருவரின் இரண்டாவது திருமணம் செல்லாது எனக் கருதப்பட்டாலும், அந்தத் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் சட்டப்பூர்வமானவர்களாகவே கருதப்படுவார்கள். சட்டப்பிரிவு 16(1)-ன் கீழ், இந்தக் குழந்தைகளுக்குத் தங்கள் பெற்றோரின் சொத்தில் முழு உரிமை உண்டு. ஆனால், இது பெற்றோரின் சுயசம்பாத்திய சொத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும், பூர்வீகச் சொத்துக்களுக்குப் பொருந்தாது.
தர்மேந்திராவின் மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் சமமாகப் பிரிக்கப்படும். தர்மேந்திராவின் முதல் மனைவி பிரகாஷ் கவுரின் பிள்ளைகளான சன்னி தியோல், பாபி தியோல், அஜிதா தியோல், விஜேதா தியோல் மற்றும் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த மகள்களான இஷா தியோல், அஹானா தியோல் ஆகியோருக்கு தர்மேந்திராவின் சொத்தில் சம உரிமை உண்டு. ஆனால், இந்து திருமணச் சட்டத்தின்படி ஹேமமாலினியுடனான அவரது இரண்டாவது திருமணம் செல்லாததாகக் கருதப்பட்டால், ஹேமமாலினிக்கு தர்மேந்திராவின் சொத்தில் பங்கு கிடைக்காது."