திரையுலகில் ஆல்ரவுண்டர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார் நடிகர் தனுஷ். தமிழை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் திரையுலகிலும் கலக்கி வருகிறார். அதே போல் நடிப்பு மட்டும் இன்றி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல விதத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
தமிழில் இவர் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் வாத்தி என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகம் ஆகி உள்ளார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.
வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது வாத்தி படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது.
ஏனெனில், வாத்தி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த தினேஷ் கிருஷ்ணன் திடீரென இப்படத்தில் இருந்து விலகி உள்ளார். தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பதில் வேறு ஒளிப்பதிவாளரை படக்குழு தேடி வருகிறது.