நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது.
இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இதுதவிர மற்றொரு முக்கிய கதாபாத்திரமான அஜித்தின் தம்பி வேடத்தில் ராஜூ ஐய்யப்பா நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜாவும், பின்னணி இசையை ஜிப்ரானும் இசையமைத்துள்ளார். மேலும் நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த இப்படம், கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் வலிமை படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது. இதனிடையே வலிமை படத்தின் முதல் பாதியில் விசாரணை காட்சிகளும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கும் என அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் பெயரில் ஒரு டுவிட் வைரலாகி வந்தது.
இந்நிலையில், அது போலியான டுவிட்டர் கணக்கு என தெரியவந்துள்ளது. திலீப் சுப்பராயன் தனது டுவிட்டர் பதிவு மூலம் அதனை உறுதிப் படுத்தி உள்ளார். மேலும் அந்த கணக்கை பிளாக் செய்யுமாறும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் மகன் தான் திலீப் சுப்பராயன் என்பது குறிப்பிடத்தக்கது.