நடிகர் தனுஷ் தனது 44 வது படமான 'திருச்சிற்றம்பலம்' படத்தை, சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிக்கிறார்.
மித்ரன் ஜவஹர் இயக்கி வரும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷ் எழுதியுள்ளார். மேலும் டி.என்.ஏ. என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தனுஷ் மற்றும் அனிருத் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலமாக ஒன்றிணைந்துள்ளனர்.
இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
அதனைத் தொடர்ந்து தனுஷ் உடன் பிரபல நடிகைகளான ராஷி கண்ணா,நித்யா மேனன், மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் என மூன்று நடிகைகள் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் செட் அமைத்து நடைபெற்று முடிந்துள்ளது. போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்ற அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு பிரச்சனை இந்த படத்தின் டைட்டிலால் தனுஷுக்கு வந்துள்ளது. இந்த படத்திற்கு 'திருச்சிற்றம்பலம்' என பெயர் வைத்துள்ள நிலையில், அந்த வார்த்தையை பயன்படுத்தும்போது தவறாக சித்தரித்திருந்தால், சிவனடியார் கூட்டம் அனைவரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என தெரிவித்துள்ளனர்.
தேவாரம் திருமுறைகளில் பயன்படுத்தக்கூடிய புனிதச் சொல்லான இதை நல்ல முறையில் பயன்படுத்தி இருந்தால் மகிழ்ச்சி என்றும் அறிவித்துள்ளனர்.
என்ன காரணத்திற்காக இந்த பெயர் அப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்பது இது வரை தெரியாத நிலையில், முன்னெச்சரிக்கையோடு இப்போதே சிவனடியார்கள் வார்னிங் கொடுத்து, சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.