Maaran Review : கவுத்திவிட்ட ஜகமே தந்திரம்... மாறன் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினாரா தனுஷ்?- முழு விமர்சனம்

First Published | Mar 11, 2022, 11:22 PM IST

Maaran Review : கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி நடிப்பில் ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் மாறன் படத்தின் விமர்சனம்.

தனுஷின் தந்தை ராம்கி ஒரு நேர்மையான, உண்மையான பத்திரிகையாளராக இருக்கிறார். ராம்கியின் நேர்மை பிடிக்காத எதிரிகள் தனுஷ் சிறுவனாக இருக்கும்போதே அவரை கொன்றுவிடுகின்றனர். இதையடுத்து தங்கை ஸ்மிருதி பிறந்தவுடன் தாயும் இறந்துவிடுகிறார். இதன்பின்னர் தாய்மாமா கிஷோரின் அரவணைப்பில் தான் இவர்கள் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

வளர்ந்து பெரியவன் ஆனதும்  தந்தையைப் போல் நேர்மையான பத்திரிகையாளராக இருக்கும் தனுஷ், இடைத்தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லு வேலைகளை அம்பலப்படுத்துகிறார். இதன்மூலம் முன்னாள் அமைச்சர் சமுத்திரக்கனிக்கும் தனுஷுக்கு இடையே பகை உண்டாகிறது. இந்த சமயத்தில் தனுஷின் தங்கை ஸ்மிருதி வெங்கட்டை யாரோ கொலை செய்து விடுகிறார்கள்.

Tap to resize

அவரை சமுத்திரக்கனி தான் கொலை செய்து இருப்பார் என சந்தேகப்படும் தனுஷ், அது பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரித்த பின்னர் தான் சமுத்திரக்கனிக்கும் அந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிய வருகிறது. இறுதியில் தங்கையை கொலை செய்தது யார் என்பதை தனுஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் தனுஷ், முதல் பாதியில் ஜாலியான இளைஞராக இளமை ததும்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் தங்கை இறந்த பிறகு கொஞ்சம் சீரியஸான ரோலில் நடித்து இருக்கிறார். எத்தனையோ கஷ்டமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள தனுஷுக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரியான ரோல் தான். அதனை சிறப்பாக செய்துள்ளார்.

நாயகி மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தைப்போல் இதிலும் அவருக்கு பெரிதாக வேலையில்லை. வழக்கமான ஹீரோயின் போல் நாயகனோடு வந்துபோகும் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை பார்க்கும் போது இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா என எண்ண தோன்றுகிறது.

தனுஷின் தங்கையாக வரும் ஸ்மிருதி வெங்கட் திறம்பட நடித்து இருக்கிறார். அவருக்கும் தனுஷுக்கும் இடையேயான அண்ணன் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளன. அரசியல்வாதியாக நடித்து அதில் கொஞ்சம் வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கிறார் சமுத்திரக்கனி. அமீர் குறைந்த காட்சிகளே வந்தாலும் படத்தில் எதிர்பாரா டுவிஸ்ட் கொடுத்துள்ளார். மாஸ்டர் மகேந்திரன், கேகே ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் கார்த்திக் நரேன், கதாபாத்திர தேர்வில் கச்சிதம் காட்டிய இவர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். துருவங்கள் பதினாறு படத்தை எடுத்தவரா இவர் என கேட்கும் அளவுக்கு இப்படத்தின் கதை உள்ளது. தனுஷ் போன்ற அசுரத்தனமான நடிகரை சரிவர பயன்படுத்தாது ஏன் என்ற கேள்வி தான் கேட்க தோன்றுகிறது. 

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மற்ற பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், பொல்லாத உலகம் பாடல் மட்டும் கேட்கும் ரகமாக உள்ளது. விவேகானந்த் சந்தோஷமின் ஒளிப்பதிவு கச்சிதம். ஆகமொத்தம் மாறன் தனுஷுக்கு ‘வெற்றி’மாறனாக அமையவில்லை. 

இதையும் படியுங்கள்... நான் வளர ரஜினி காரணமில்லை..தனுஷ் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்

Latest Videos

click me!