சேலம் அருகே இள்ள சின்னப்பம்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் நடராஜன். தமிழ்நாடு அணியில் சிறப்பாக விளையாடிய இவருக்கு, கடந்த 2017-ம் ஆண்டு முதன்முதலில் பஞ்சாப் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது பெரிதாக சோபிக்க தவறிய இவர், அடுத்ததாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது. அந்த அணிக்கு சென்றதும் இவரது கெரியர் மளமளவென உயர்ந்தது.
அடுத்தடுத்த ஐபிஎல் தொடர்களில் இறுதி ஓவர்கள் வீசுவதில் கில்லாடி பவுலராக விளங்கிய நடராஜனை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்றும் செல்லமாக அழைத்தனர். அந்த அளவுக்கு துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசி முன்னணி வீரர்களையே திணறடித்தார். இவரின் திறமையை பார்த்து வியந்துபோன பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த தொடருக்கு இவரை தேர்வு செய்தார்.
இறுதியில், அந்த தொடரில் பும்ரா, ஷமி போன்ற முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக விலகியதால், நடராஜனுக்கு டெஸ்ட் அணியிலும் இடம் கிடைத்தது. அதிலும் தன் திறமையை நிரூபித்த அவர், அந்த ஒரே தொடர் மூலம் உலகமெங்கும் பேமஸ் ஆனார். இவ்வாறு சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னி வரை கலக்கிய நடராஜனின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க அப்போதே பலரும் முயன்றனர்.