
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களெல்லாம் சொதப்பினாலும், யாரும் எதிர்பாராத படங்களெல்லாம் ஹிட் அடித்திருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் சினிமா மொத்தம் எட்டு 100 கோடி வசூல் படங்களை கொடுத்திருக்கிறது. அதில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் தலா இரண்டு 100 கோடி வசூல் படங்களை கொடுத்துள்ளனர். ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் தலா ஒரு 100 கோடி வசூல் படத்தை கொடுத்திருக்கின்றனர். அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு முதல் 100 கோடி வசூல் படத்தை கொடுத்தது அஜித் தான். அவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன விடாமுயற்சி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.137.5 கோடி வசூலித்திருந்தது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் 137 கோடி வசூலித்தும் தோல்விப்படமாகவே அமைந்தது.
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்ட வெற்றிப் படம் என்றால் அது டிராகன் தான். அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக அனுபமா மற்றும் கயாடு லோகர் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.151 கோடி வசூலை வாரிக்குவித்தது.
அஜித் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன இரண்டாவது படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி தோல்வியால் இப்படத்தில் கில்லி போல் சொல்லி அடித்த அஜித், பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 243 கோடி ரூபாய் வசூல் செய்து, அஜித்தின் கெரியரிலேயே அதிக வசூல் செய்த படமாக மாறியது.
100 கோடி கிளப்பில் இந்த ஆண்டு நான்காவதாக நுழைந்த படம் குபேரா. தனுஷ் ஹீரோவாக நடித்த இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி இருந்தார். இப்படம் தமிழ்நாட்டில் தோல்வியை தழுவினாலும், தெலுங்கில் சக்கைப்போடு போட்டதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.135.76 கோடி வசூலை வாரிக்குவித்து வெற்றி பெற்றது.
2025-ம் ஆண்டு நூறு கோடி கிளப்பில் இணைந்த ஐந்தாவது படம் தலைவன் தலைவி. பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், சரவணன், தீபா, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததை படக்குழுவே அறிவித்தது.
2025-ம் ஆண்டு ஒரே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய படம் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி தான். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்தது. முதல் நாளே 100 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் உலகளவில் இறுதி வசூலாக 537 கோடி வசூலித்துள்ளது.
இந்த ஆண்டு 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த மற்றொரு திரைப்படம் மதராஸி. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். இப்படமும் 100 கோடி மேல் வசூல் செய்ததை படக்குழுவே அறிவித்தது.
100 கோடி கிளப்பில் லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் டியூட். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, டிராவிட் செல்வம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் ரிலீஸ் ஆன 6 நாட்களிலேயே 100 கோடி வசூல் அள்ளியது.