விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பளராக அறிமுகமானவர் ரக்ஷன். இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கியதோடு, நடிப்பிலும் அசத்தினார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன. இதையடுத்து திருட்டு ரயில் என்கிற படம்மூலம் நடிகராக அறிமுகமானார் ரக்ஷன்.
கடந்த 2020-ம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானுக்கு நண்பனாக நடித்து அசத்தினார். அப்படத்தின் அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இதன்பின்னர் ஒரு சில மியூசிக் வீடியோக்களில் நடித்த ரக்ஷன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கடந்த 3 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கிய ரக்ஷனுக்கு அண்மையில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. இவர் பைக் ரேஸிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக பிரத்யேக பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.