நடிகர் திரு. விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், “மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்
சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' விவேக் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்னக்கலைவாணர் அண்ணன் விவேக் அவர்கள் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன். அன்போடு பழகுவதிலும்-சமூக சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே. அண்ணன் அவர்கள் மீண்டு வந்து தமிழக மக்களை சிரிக்க-சிந்திக்க வைக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.
உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது பற்றி கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன் விவேக். என்னுடைய பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு. சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்களிடம் பேசினேன். சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளேன். விரைவில் நலம் பெற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து கூறியுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர், நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் நல்ல ஆரோக்கியத்துடன், பூரண நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகரும், அன்பு சகோதரருமான திரு.விவேக் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்” உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்றுவரும்நகைச்சுவை நடிகர்நண்பர் விவேக் அவர்கள் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறேன் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகையும், ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளருமான குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களுள் விவேக்கும் ஒருவர். அவர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் விரைவில் நலமடைந்து நம்மோடு இணைவார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.