பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், அவருடைய சகோதரர் அழகர்சாமியின் வீட்டிலும், அன்புசெழியனுக்கு எனக்கு நெருக்கமாக உள்ளவர்கள் வீட்டிலும் இந்த சோதனை தற்போது நடந்து வருகிறது.
சென்னை மட்டும் இல்லாமல் மதுரையிலும் அன்புசெழியனுக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் குறிப்பாக மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீழத்துரை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் அன்புசெழியனுக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து, சினிமா பணிகளுக்காக சாக்கு முட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 கோடி ரூபாய் பணத்தை வருமான வரி துறையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய சூர்யா - கார்த்தி..! தேவதை போல் வந்த அதிதி... 'விருமன்' ஆடியோ லான்ச் போட்டோஸ்!
ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு, 'பிகில்' திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில், ஏஜிஎஸ் சினிமாஸ், நடிகர் விஜயின் வீடு மற்றும் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரிசையில் துறையினர் சோதனை நடத்தியதில், சுமார் 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்கள் பல கஷ்டங்களையும், நிதி நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த சமயத்தில், அன்புசெழியன் போன்றவர்கள் தான் மிகக் குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு பேர் உதவியாக இருந்து வருகின்றனர். இருப்பினும், அன்புசெழியனிடம் பல பேர் உதவி பெற்று, பின்னர் பணம் கொடுக்க முடியாத சூழல் காரணமாக ஏமாற்றி உள்ளனர். இப்படி தயாரிப்பாளர்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வரும் நிலையில் வருமான வரித்துறையினர், அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்துவது சரியல்ல என கே.ராஜன் தெரிவித்துள்ளார்.