லயோலா கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பை முடிந்த விக்ரம் “என் காதல் கண்மணி” படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் “தந்துவிட்டேன் என்னை”, “மீரா”, “காவல் கீதம்” போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா இவரை கண்டுகொள்ளவில்லை.
பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் டப்பிங் கலைஞராக பணியாற்றிக் கொண்டே வாய்ப்பு தேட ஆரம்பித்தார் விக்ரம். “அமராவதி”யில் அஜித், “காதலன்”, “மின்சார கனவு” படங்களில் பிரபுதேவா, “விஜபி”, “காதல் தேசம்”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” ஆகிய படங்களில் அப்பாஸ் ஆகியோருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
அதிர்ஷ்டத்தை நம்பும் சினிமாவில் தன்னம்பிக்கையையும் கடின உழைப்பையும் மட்டுமே முதலீடாக கொண்டு தனித்துவம் மிக்க நடிகனாக உருவானார். பாலாவின் “சேது” படத்திற்கு பின்னர் விக்ரம் மீது சினிமா வெளிச்சம் பட ஆரம்பித்தது.
அடங்கி வைத்திருந்த சினிமா மீதான தனது காதலை ‘தில்’, ‘தூள்’, ‘சாமி’, ‘காசி’, ‘பிதாமகன்’ என பல பரிமாணங்களில் கொட்டித்தீர்த்தார்.
‘அந்தியன்’, ‘தெய்வத்திருமகள்’, ‘ஐ’ போன்ற படங்களுக்காக தன்னை தானே சோதனைக்கூடமாக மாற்றி உடல் எடையை கூட்டியும், குறைந்தும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
பாலா, மணிரத்னம், ஷங்கர், ஹரி, லிங்குசாமி, தரணி உள்ளிட்ட டாப் இயக்குநர்களின் பேவரைட் பட்டியலில் இடம் பிடித்தார். சீயான் தொட்டது எல்லாம் தூள் பறக்க ஆரம்பித்தது.
இடையில் ‘மஜா’, ‘பீமா’, ‘தாண்டவம்’, ‘10 எண்றதுக்குள்ள’, ‘ஸ்கெட்ச்’, ‘சாமி 2’ என சறுக்கல்களை சந்தித்து வந்தாலும் தற்போது செகண்ட் இன்னிங்ஸிற்கு அதே உற்சாகத்தோடு தயாராகிவிட்டார்.
மகன் துருவை தன்னை விட சிறந்த நடிகனாக கொண்டு வர அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக தனது பட வேலைகளை எல்லாம் விட்டு ஆதித்யா வர்மா படத்தின் போஸ்ட் புரோடக்ஷன், புரோமோஷன் என அனைத்தையும் சிறப்பாக கவனித்து கொண்டார்.
தற்போது விக்ரமின் 60வது படம் குறித்த அசத்தல் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் சேர்ந்து விக்ரம் நடிக்க உள்ள “சீயான்60” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதுமட்டுமின்றி “கோப்ரா”,“பொன்னியின் செல்வன்” ஆகிய படங்களும் விக்ரமின் கைவசம் உள்ளன.
இப்படி பல இன்னங்களை கடந்து ஹீரோவாக அவதாரம் எடுத்திருந்தாலும் ஆரம்ப காலத்தில் விக்ரம் கிடைத்த வேலைகள் அனைத்தையும் செய்து வந்தார். அப்படி இளம் பருவத்தில் சீயான் நடித்த இந்த டீ தூள் விளம்பரத்தில் நடித்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.