பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் திரைப்படத்தில் இருந்து இளையராஜா பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
High Court Order To Remove Ilaiyaraaja songs from Dude Movie
தமிழ் திரையுலகில் ரைசிங் ஸ்டாராக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் இதுவரை வெளியான மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்துள்ளன. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டியூட். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற இளம் இயக்குநர் இயக்கி இருந்தார். இப்படம், கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார்.
டியூட் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து இருந்தார். அதுமட்டுமின்றி அப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களான நூறு வருஷம் பாடல் மற்றும் கருத்தமச்சான் பாடல் ஆகியவை இடம்பெற்று இருந்தன. இந்தப்பாடலுக்காக இளையராஜாவிடம் முறைப்படி அனுமதி வாங்காமல் தான் அதனை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தத் தகவலை வேறு ஒரு காப்புரிமை வழக்கு விசாரணையின் போது இளையராஜா தரப்பு முன் வைத்தது. அப்போது தேவைப்பட்டால் அதை தனி வழக்காக தொடர நீதிமன்றம் அறிவுறித்தியது.
22
டியூட் படத்தில் இருந்து இளையராஜா பாடல்களை நீக்க உத்தரவு
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டியூட் படத்தில் தன்னுடைய அனுமதி இன்றி தனது பாடல்களை பயன்படுத்தி இருப்பதாகவும், அதை உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அப்பாடலை படத்தில் இருந்து நீக்க 7 நாட்கள் அவகாசம் வேண்டும் என டியூட் படக்குழு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதையெல்லாம் ஏற்க மறுத்த நீதிபதி அப்பாடல்களை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதனால் அப்பாடல்களை உடனடியாக நீக்க வேண்டிய கட்டாயத்தில் டியூட் படக்குழு உள்ளது. அப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீக் ஆகி வருகிறது. இதேபோல் குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து, அப்படத்தை ஓடிடியில் இருந்து நீக்கிவிட்டு, அதில் உள்ள இளையராஜா பாடல்களை எல்லாம் தூக்கிய பின்னர் மீண்டும் பதிவேற்றினர். தற்போது டியூட் படத்திற்கும் அதே நிலை ஏற்பட்டு உள்ளது.