மலையாள நடிகர் மம்முட்டி தனக்கு இந்த பெயரை வைத்து தனது கல்லூரி நண்பனை பற்றி கூறியதோடு, அவரை மேடையேற்றி அழகுபார்த்த தருணம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் பலர் தங்கள் ஒரிஜினல் பெயரை மாற்றிவிடுவார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி தனுஷ் வரை பல நடிகர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அப்படி மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியும் தன்னுடைய ஒரிஜினல் பெயரை சினிமாவில் பயன்படுத்துவது இல்லை. சொல்லப்போனால் அவரை மம்முட்டி அல்லது மம்முக்கா என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும், அந்த அளவுக்கு அந்தப் பெயர் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இந்த நிலையில், மம்முட்டிக்கு அப்பெயர் வர காரணமானவர் யார் என்பது தெரியவந்துள்ளது.
மம்முட்டியின் ஒரிஜினல் பெயர்
மம்முட்டியின் ஒரிஜினல் பெயர் முகமது குட்டி இஸ்மாயில் பணிபரம்பில். மற்ற ஹீரோக்களைப் போல் சினிமாவுக்கு வந்த பின் பெயரை மாற்றாமல், சினிமாவுக்கு வரும் முன்னரே அவர் தனது பெயரை மம்முட்டி என மாற்றிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் அவரது கல்லூரி நண்பர் தானாம். சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டபோது தனாக்கு மம்முட்டி என பெயர் வந்ததன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான கதையை கூறினார்.
22
முகமது குட்டி மம்முட்டி ஆனது எப்படி?
முகமது குட்டி என்பது பழைய பெயர் என்பதால் அதை விரும்பாத மம்முட்டி, கல்லூரியில் அனைவரிடமும் தனது பெயர் ஓமர் ஷெரிப் என கூறி இருக்கிறார். அது ஒரு அரேபிய நடிகரின் பெயர். தனது உண்மையான பெயரை அனைவரிடமும் மறைத்து வந்த மம்முட்டி, ஒரு நாள் தனது கல்லூரி ஐடி கார்டை கீழே போட்டிருக்கிறார். அப்போது அதை எடுத்து பார்த்த அவரது நண்பர், உன்னோட உண்மையான பெயர ஓமர் ஷெரிப் இல்லையா என கேட்டதோடு, முகமது குட்டி என்கிற அவரது ஒரிஜினல் பெயரை சுருக்கி மம்முட்டி என கிண்டலாக அழைத்திருக்கிறார்.
மம்முட்டியின் பெயரை மாற்றியது யார்?
அந்தப் பெயர் தான் நாளடைவில் அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது. அப்படி தனக்கு மம்முட்டி என பெயரிட்டவர் இந்த அரங்கத்தில் தான் இருக்கிறார் என மேடையில் இருந்தே ஒருவரை கைகாட்ட, அந்த நபர் மேடைக்கு செல்கிறார். அவரை மேடையில் ஆரத்தழுவி, இவர்தான் சசிதரன். எனக்கு மம்முட்டி என பெயர் சூட்டிய பெருமை இவரையே சேரும் என கூற, அங்கிருந்த அனைவரும் மம்முட்டியின் செயலை பார்த்து வியந்துபோயினர். இத்தனை வயதிலும் தன்னுடைய நண்பனை மேடையேற்றி பெருமைப்படுத்திய அவரின் குணத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.