
பாலிவுட்டின் மிகப் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சல்மான் கான். அவரது முழு பெயர் அப்துல் ரஷீத் சலீம் சல்மான் கான். இவர் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி ஆளுமை மற்றும் ஏழைகளுக்கு உதவும் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் 1965 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார். இவரது தந்தை சலீம் கான் பிரபல திரைக்கதை எழுத்தாளர் ஆவார். தந்தை திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால் சல்மான் கானுக்கும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. சிறுவயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வந்தார்.
1988 ஆம் ஆண்டு வெளியான ‘பீபி ஹோ தோ ஐசி’ என்கிற படத்தில் ஒரு துணை படத்தில் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டு ‘மைனே பியார் கியா’ என்கிற திரைப்படம் இவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையை கொடுத்தது. இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதும் சல்மான் கானுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றி படங்கள் அனைத்துமே சல்மான் கானை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக நிலை நிறுத்தின. 10 தனிப்பட்ட ஆண்டுகளில் வருடாந்திரம் அதிகம் வசூல் செய்த இந்தி படங்களில் நடித்த பெருமையை அவர் பெற்றார். இது வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத மிக உயர்ந்த சாதனையாகும்.
சல்மான் கான் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வெற்றி கண்டவர். பிக் பாஸ் போன்ற பல பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பீயிங் ஹ்யூமன் (Being Human) என்கிற தொண்டு நிறுவனத்தை தொடங்கி கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பின் தங்கிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். குறிப்பாக குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைகளுக்கு நிதி உதவி செய்து வருகிறார். தனது படங்களில் வரும் லாபத்தின் ஒரு பகுதியையும், விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் இந்த தொண்டு நிறுவனத்திற்கு அளித்து வருகிறார். ‘பீயிங் ஹ்யூமன்’ என்கிற பிராண்டில் ஆடைகள், மின்சார சைக்கிள்கள் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டுள்ளார். திரைத்துறையில் இவ்வளவு உச்சத்தை அடைந்த அவர், இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் உறவுகள் குறித்து சமூக ஊடகங்களில் அடிக்கடி வதந்திகள் வெளியாவது உண்டு.
இந்த நிலையில் சல்மான் கான் திருமணம் செய்து கொள்ளாததற்கு அவர் உடல் உடல்நிலை தான் காரணம் என்று பலரும் வதந்தி பரப்பி வந்தனர். இந்த நிலையில் சல்மான் கான் தனக்கு உடலில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சல்மான் கான், “நான் இத்தனை ஆண்டுகளாக உழைத்து சேர்த்து சொத்துக்களை விவாகரத்தின் மூலமாக ஒரு பெண்ணுக்கு தர விரும்பவில்லை” என்று கூறினார். 59 வயதாகும் தமக்கு உடலில் பல நோய்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ‘ட்ரைஜெமினல் நியூராலஜியா’ என்ற நாள்பட்ட நோய் இருக்கிறது. இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு முகத்தில் அடிக்கடி ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்படும்.
ட்ரைஜெமினல் நியூராலஜியா என்பது முகத்தில் உள்ள டிரைஜெமினல் நரம்பை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நரம்பியல் கோளாறை குறிக்கும். இந்த நோய் தாக்கும் பொழுது முகத்தில் மின்னல் வெட்டுவது போன்ற கடுமையான வலி ஏற்படும். பேசுவது, முகத்தை தொடுவது, சாப்பிடுவது போன்ற தினசரி செயல்பாடுகள் கூட இந்த வலியை அதிகரிக்கச் செய்யும். 2007 ஆம் ஆண்டு முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வரும் அவர், 2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னரே அவருக்கு இதிலிருந்து நிவாரணம் கிடைத்துள்ளது. இந்த நோயுடன் போராடியதை அவர் வெளிப்படையாக பேசியதன் மூலம் இந்த அரிய, வேதனையான நிலையைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியது.
இது தவிர சல்மான் கானுக்கு ‘மூளை அனியூரிசம்’ (Brain Aneurysm) என்கிற நோய் உள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு மூளையில் உள்ள ரத்த நாளங்களில் சில இடங்களில் பலூன் போன்ற வீக்கம் ஏற்படும். இது மட்டுமல்லாமல் ‘ஆர்டெரியோவெனஸ் மால்ஃபார்மேசன்ஸ்’ (Arteriovenous Malformations) என்கிற தீவிரமான பிரச்சனையும் இருக்கிறது. இந்த பாதிப்பு தமனி குறைபாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு வலிப்பு, பார்வை குறைபாடு, நரம்பியல் குறைபாடு, கடுமையான தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவ்வளவு கடுமையான பாதிப்புகளுடன் சல்மான் கான் போராடிவரும் நிலையிலும் அவற்றைத் தாண்டி தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது விடாமுயற்சி பலருக்கும் உத்வேகமாக விளங்குகிறது. அவர் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருகிறார்.
அவரது ஸ்டைல், நடிப்பு, நடனம், திரை ஆளுமை அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளன. அவர் தொடர்ந்து புதிய படங்களிலும், சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். உடல் நலனில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அவர் அதையெல்லாம் வெளிக்காட்டாமல் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறார்.