
நடிகர்கள் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருந்த திரைப்படம் தான் குபேரா. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. ஜூன் 20 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருந்த ‘குபேரா’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
நடிகர் தனுஷ் சமீபகாலமாக நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ராயன்’. இது தனுஷின் 50-வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை தனுஷே எழுதி, இயக்கி, நடித்து இருந்தார். இந்த திரைப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்திருந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படம் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. இயக்குனர் சேகர் கம்முலாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்ததால் தனுஷ் அவர் நடிப்பில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானதுமே இந்த படம் குறித்து மிகப் பெரிய ஆவல் எழுந்தது.
மேலும் படத்தில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, சாயாஷி ஷிண்டே என பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் ஆன போது படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்துள்ளார். படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் மிக நேர்த்தியாக வரவேண்டும் என்பதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதற்காக கீழ் திருப்பதியில் பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து பல நாட்கள் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் கதை குறித்து பார்த்தோம் என்றால், தொழிலதிபர் ஒருவர் எண்ணெய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார். அதற்காக அவர் மந்திரிக்கு லஞ்சம் கொடுத்து அந்த ஒப்பந்தத்தை கைப்பற்ற நினைக்கிறார். ஆனால் மந்திரி ஒரு லட்சம் கோடி ரூபாய் லஞ்சமாக கேட்கிறார்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றத்தை பாதுகாப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரியான நாகார்ஜூனாவின் உதவியை தொழிலதிபர் நாடுகிறார். அவர் 4 கம்பெனிகளை ஆரம்பித்து அதற்கு பிச்சைக்காரர்கள் நான்கு பேரை இயக்குனர் ஆக்கி அதன் மூலம் பரிவர்த்தனை செய்யலாம் என்று ஐடியா கொடுக்கிறார். அதற்காக கம்பெனிகளும் தொடங்கப்படுகின்றன. நான்கு பிச்சைக்காரர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அதில் ஒருவர் தான் தனுஷ். அவர் பெயரில் ஒரு கம்பெனி தொடங்கப்பட்டு பண பரிமாற்றம் நடைபெற ஆரம்பிக்கிறது. அந்த சமயத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு தனுஷ் தப்பித்து ஓடுகிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.
படம் குறித்து வெளியான விமர்சனங்களில் படத்தின் ரன்னிங் டைம் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. படம் 3 மணி நேரம் இரண்டு நிமிடங்கள் ஓடுவதும், படத்தின் கதையை சுருக்கமாக சொல்ல முடியாமல் சுற்றி வளைத்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இது படத்தின் நெகட்டிவ்வாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜூனா ஆகியோரின் நடிப்புகள் வெகுவாக பாராட்டப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. லாஜிக் இல்லாத சில காட்சிகளை நீக்கிவிட்டு, படத்தின் நேரத்தை இன்னமும் குறைத்து இருந்தால் படம் மிக நன்றாக வந்திருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.14.75 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கானாவில் ரூ.10 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.4.5 கோடியும், கர்நாடகாவில் 2 லட்சமும் வசூலித்தது. அதே சமயம் இரண்டாவது நாளில் சுமார் ரூ.16 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இரண்டு நாட்கள் முடிவில் ரூ.30.75 கோடி வசூலை குவித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சாக் நிக் வலைதளம் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் குறிப்பிட்ட வலைதளங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்டவை மட்டுமே. அதிகாரப்பூர்வ வசூல் நிலவரங்களை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பாளர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளை விட இரண்டாவது நாளில் வசூல் சற்று அதிகரித்து இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசூல் கணக்கில் சில மாறுதல்கள் இருக்கலாம். இருப்பினும் வார இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. படம் வணிக ரீதியாக வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் திரை விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.