இயக்குனர் சுந்தர் சி, ரஜினிகாந்தின் தலைவர் 173 திரைப்படத்தில் இருந்து விலகியது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் 33 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு இயக்குனர் ரஜினியின் படத்தில் இருந்து விலகி இருக்கிறார். அவர் யார் என்பதை பார்க்கலாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க கால்ஷீட் கிடைக்காதா என காத்திருக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில், அவரது தலைவர் 173 படத்தை இயக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை தூக்கியெறிந்துள்ளார் சுந்தர் சி. அப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் அதில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்த நிலையில், அதற்கான உண்மையான காரணத்தை அவர் வெளியிடவில்லை. தான் சொன்ன கதையில் ரஜினிகாந்த் பல மாற்றங்களை சொன்னதால், அதில் அதிருப்தி அடைந்த சுந்தர் சி இந்த படமே வேண்டாம் என விலகிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
24
சுந்தர் சி விலகல்
ரஜினியை வைத்து இதற்கு முன்னர் அருணாச்சலம் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சுந்தர் சி, 28 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடன் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்ததால் தரமான கமர்ஷியல் படம் ஒன்றை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அந்த படமே வேண்டாம் என தூக்கியெறிந்துவிட்டு சென்றதால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். அடுத்ததாக இப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் ஒருபுறம் உள்ளது. இந்த நிலையில், சுந்தர் சி-க்கு முன்னதாக ரஜினி படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு அப்படத்தில் இருந்து விலகிய மற்றுமொரு இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
34
33 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்
இந்த சம்பவம் 33 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கிறது. ரஜினிகாந்தை வைத்து படம் ஒன்றை தயாரிக்க முடிவெடுத்த கே பாலச்சந்தர். அப்படத்தை தன்னுடைய உதவி இயக்குனரான வஸந்தை இயக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். அந்த படம் தான் அண்ணாமலை. அப்படத்தை வஸந்த் இயக்குவார் என்கிற அறிவிப்பெல்லாம் வெளியாகி ஷூட்டிங்கிற்கு ரெடியாகி வந்த நிலையில், ஷூட்டிங் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னர் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார் வஸந்த். தற்போது சுந்தர் சி விலகியது எந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்படுகிறதோ, அந்த சமயத்திலும் வஸந்த் விலகியது பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து கே பாலச்சந்தர் தன்னிடம் பணியாற்றிய மற்றொரு உதவி இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணாவிடம் அப்படத்தை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அவரும் ஒரு தரமான ஹிட் படமாக அண்ணாமலையை எடுத்து சாதித்தார். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினியை வைத்து வள்ளி, பாட்ஷா, பாபா போன்ற படங்களை இயக்கினார். இதில் பாட்ஷா திரைப்படம் ஆல் டைம் ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.