
பாலிவுட் நடிகர்கள் எல்லாம் இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார். அந்த அளவுக்கு செம டிமாண்ட் உள்ள இயக்குனராக உருவெடுத்துள்ளார் அட்லீ. இவர் பிறந்தது மதுரையில், படித்ததெல்லாம் சென்னையில். கல்லூரியில் படிக்கும்போதே குறும்படங்களை இயக்கி வந்தார் அட்லீ. அப்படி இவர் இயக்கிய ‘என்மேல் விழுந்த மழைத்துளி’ என்கிற குறும்படத்திற்கு தேசிய அளவில் விருதுகளும் கிடைத்தது. இதையடுத்து மணிரத்னம், கெளதம் மேனன், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்ற முயற்சித்து வந்த அட்லீக்கு ஷங்கரிடம் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் என்றால் சும்மா விடுவாரா உடனே ஓகே சொல்லி சேர்ந்துவிடுகிறார்.
எந்திரன் படத்தை தொடர்ந்து ஷங்கர் - விஜய் கூட்டணியில் உருவான நண்பன் படத்திலும் பணியாற்றிய அட்லீ, 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ராஜா ராணி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தாலும் அது மணிரத்னத்தின் மெளன ராகம் படத்தின் காப்பி என்கிற விமர்சனங்கள் எழுந்தன.
பின்னர் இரண்டாவது படத்திலேயே அட்லீக்கு அடித்தது ஜாக்பாட். அவருக்கு விஜய்யை வைத்து தெறி என்கிற மாஸ் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தை ஒரு விஜய் ரசிகனாக செதுக்கி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தரமான ஹிட் படமாக தெறி அமைந்தது. இப்படமும் காப்பி சர்ச்சையில் சிக்கியது. இது விஜயகாந்தின் சத்ரியன் படத்தின் காப்பி என குற்றச்சாட்டு எழுந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த படங்களில் பிசியானார் அட்லீ.
தெறி ஹிட் ஆனதும் அடுத்தடுத்து விஜய்யின் மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை தட்டிதூக்கினார் அட்லீ. அந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக ஹிட் அடித்தன. இதில் மெர்சல் படம் மூன்று முகம் மற்றும் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்றும், பிகில் ஷாருக்கானின் சக்தே இந்தியா படத்தின் காப்பி என்றும் விமர்சிக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி வந்த அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்தது. அதுவும் ஷாருக்கான் படம்.
இதனால் தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லீ, அங்கு ஷாருக்கான் ரசிகர்களை மெர்சலாக்கும் வகையில் ஜவான் என்கிற அதிரடி ஆக்ஷன் படத்தை கொடுத்து பாலிவுட்டை மிரள வைத்தார். இதுவரை 33 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடித்து வரும் ஷாருக்கான், பல ஜாம்பவான் டைரக்டர்களுடன் பணியாற்றி இருந்தாலும், அவர்களால் பெற்றுத்தர முடியாத தேசிய விருதை ஜவான் படம் மூலம் பெற்றுத் தந்தார் அட்லீ. ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படி தனக்கு தடைக்கல்லாக இருப்பவற்றை படிக்கல்லாக மாற்றி அடுத்தடுத்த உயரங்களை எட்டி வரும் அட்லீ, தற்போது ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்திற்காக அட்லீக்கு ரூ.100 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. இது இந்திய சினிமாவே பெருமை கொள்ளும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.