பருத்திவீரன் கார்த்தி கெட்-அப்பில் ஆர்யா.. வைரலாகும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

First Published | Dec 11, 2022, 1:11 PM IST

நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளான இன்று, முத்தையா இயக்கத்தில் அவர் நாயகனாக நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் முத்தையா. இவர் சசிகுமார் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீசான குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி என தொடர்ந்து மண்மனம் மாறாத கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து வருகிறார்.

முத்தையா இயக்கத்தில் கடைசியாக ரிலீசான படம் விருமன். கார்த்தி கிராமத்து இளைஞனாக நடித்திருந்த இப்படத்தில் ஷங்கர் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமானார். அதுமட்டுமின்றி பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், வடிவுக்கரசி, ஆர்.கே.சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீசான விருமன் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... ரீ-ரிலீஸில் கெத்து காட்டினாரா ரஜினி..! பாபா படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?


விருமன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆர்யா உடன் கூட்டணி அமைத்தார் முத்தையா. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. அந்த போஸ்டரில் தொடை தெரிய கைலியை ஏத்தி கட்டிக்கொண்டு பக்கா கிராமத்து இளைஞர் கெட்-அப்பில் ஆர்யா இருக்கிறார். 

இந்தபோஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஆர்யா, பருத்திவீரன் கார்த்தி போல் இருப்பதாக ஒப்பிட்டு வருகின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அதேபோல் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். யானை படத்தை தயாரித்த டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதையும் படியுங்கள்... ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்... உற்சாகம் பொங்க யூடியூப் பிரபலம் வெளியிட்ட போட்டோ வைரல்

Latest Videos

click me!