யானை படத்தின் கதைப்படி, ஒரு மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் அருண்விஜய். இவர்களது குடும்பத்துக்கு ஊரில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. அந்த குடும்பத்தின் பெரியவராக ராஜேஷ் நடித்திருக்கிறார். அவரது மகன்களாக சமுத்திரக்கனி, சஞ்சீவ், போஸ் வெங்கட் ஆகியோர் உள்ளனர். இவர்களது சித்தியாக ராதிகா நடித்துள்ளார். இவருக்கு பிறந்த மகன் தான் அருண் விஜய்.
இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர்களது குடும்பத்துக்கு பரம்பர எதிரி ஒருவர் இருக்கிறது. எதிர்பாராத விதமாக அருண்விஜய் குடும்பத்தின் மூலம் எதிரியின் குடும்பத்தில் ஒரு இழப்பு நேரிடுகிறது. இதனால் அருண்விஜய் குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறார்கள். இதையடுத்து எதிரிகளிடம் இருந்து அருண்விஜய் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை விறுவிறுப்பாக சொல்லி உள்ள படம் தான் யானை.
இதையும் படியுங்கள்... Pathu Thala : சிம்பு கேங்ஸ்டராக நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு
நாயகன் அருண் விஜய், கடந்த சில படங்களில் இவர் போலீஸ் அல்லது நகரத்து இளைஞன் உள்ளிட்ட வேடங்களிலேயே அதிகம் நடித்திருந்தார். அவருக்கு இது முற்றிலும் மாறுபட்ட படமாகவே உள்ளது. இதில் முழுக்க முழுக்க கிராமத்து இளைஞனாக வருகிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் யானை பலம் கொண்டவராக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் எதிரிகளை பறக்கவிட்டு அப்ளாஸ் அள்ளுகிறார். அதேபோல் செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலங்க வைக்கிறார்.
நாயகி பிரியா பவானி சங்கர் உடனான அருண் விஜய்யின் காதல் போர்ஷன் கியூட்டாக உள்ளது. இவர்கள் இருவருக்குமிடையே கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதுதவிர ராதிகா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் சஞ்சீவ், போஸ் வெங்கட், ஐஸ்வர்யா, அம்மு அபிராமி என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... Mahesh Babu : பில்கேட்ஸ் உடன் மகேஷ் பாபு சந்திப்பு... இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ
சமுத்திரக்கனி வில்லத்தனத்துடன் கூடிய ஒரு ரோலில் திறம்பட நடித்திருக்கிறார். கேஜிஎஃப் வில்லன் ராமசந்திரா இப்படத்திலும் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரள வைத்திருக்கிறார். காமெடி வேடத்தில் யோகிபாபு மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களது காமெடி ஓரிரு இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும், சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
எமோஷனல் மற்றும் சண்டைக் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஆங்காங்கே அவரது முந்தைய படங்களான வேல், வேங்கை, கோவில் போன்ற படங்களின் தாக்கம் தெரிகிறது. இப்படத்தின் காமெடி காட்சிகள் சில இடங்களில் சொதப்பி உள்ளன. அதனை கவனித்திருக்கலாம்.
ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவி உள்ளன. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கோபிநாத்தின் ஒளிப்பதிவு ராமேஸ்வரத்தின் அழகை கண்முன் நிறுத்துகிறது. சண்டைக் காட்சிகளை பக்காவாக காட்சிப்படுத்தி உள்ளார்.
மொத்தத்தில் ‘யானை’ பலம் நிறைந்த படமாகவே உள்ளது.