தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமின்றி பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி 2டி நிறுவனம் மூலம் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார் சூர்யா.
குறிப்பாக இந்நிறுவனம் தயாரித்த கடைக்குட்டி சிங்கம், சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. தற்போது 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படம் தயாராகி வருகிறது.
சமீப காலமாக சூர்யா தயாரிக்கும் படங்கள் அனைத்தும் ஓடிடி-யில் தான் வெளியாகி வருகின்றன. பொன்மகள் வந்தாள் முதல் ஜெய் பீம் வரை இதுவரை 5 படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டுள்ளார் சூர்யா.
கடந்த செப்டம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் டீல் ஒன்றை பேசி முடித்த சூர்யா, அடுத்தடுத்து தான் தயாரித்த 4 படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட ஒப்பந்தம் செய்தார்.
அவர் பிளான் பண்ணிய படி செப்டம்பர் மாதம் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’, அக்டோபர் மாதம் ‘உடன்பிறப்பே’, நவம்பர் மாதம் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்கள் வெளியாகின.
அதேபோல் டிசம்பர் மாதம் அருண் விஜய் நடித்துள்ள ‘ஓ மை டாக்’ என்கிற படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இப்படத்தில் அருண் விஜய்யின் மகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அப்படம் திட்டமிட்டபடி வெளியிடப்பட வில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இப்படம் தாமதம் ஆவதற்கு இப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தான் காரணம் என கூறப்படுகிறது. அவர் இசைப்பணிகளை முடிக்காததால் இப்படம் தாமதமாகி வருகிறதாம். இதனால் இப்படத்தை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.