இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜாவுக்கு கடந்த மாதம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அவர் ரியாசுதீன் ஷேக் முகமது என்கிற சவுண்ட் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணத்தை எளிமையாக நடத்திய ஏ.ஆர்.ரகுமான், நேற்று தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். இதில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் தனது மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோருடன் வந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது கதீஜா - ரியாசுதீன் ஷேக் முகமது தம்பதிக்கு பசுமைக் கூடை ஒன்றையும் பரிசாக வழங்கினார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அதேபோல் பிரபல இயக்குனர் மணிரத்னம் தனது மனைவி சுஹாசினி உடன் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அடுத்ததாக உருவாகி வரும் பத்து தல படத்தின் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா, அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.