தொகுப்பாளர்களுக்கும் தனி ரசிகர்களை உருவாக்கிய தொலைக்காட்சி என்ற பெருமை சன் மியூசிக் தொலைக்காட்சியையே சேரும், அதிலும் 90'ஸ் கிட்ஸ் அதிகம் கொண்டாடிய தொகுப்பாளர்களில் ஒருவர் தான் ஆனந்த கண்ணன். சிங்கப்பூர் தமிழனான இவர், சிங்கப்பூரில் ஒளிபரப்பாகி வந்த வசந்தம் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர்.
சரளமாக தமிழ் பேசுவதால் சென்னையில் ரேடியோ ஜாக்கியாக மாறும் வாய்ப்பு தேடி சென்றது. ரேடியோ ஜாக்கியாக இருந்து கொண்டே, சின்னத்திரை வாய்ப்புகளை தேடி வந்தார். அப்போது சன் ம்யூசிக்கில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக விரைவிலேயே இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது. எனவே விக்ரமாதித்தன் போன்ற சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வெள்ளி திரையை தொடர்ந்து, வெங்கட் பிரபுவின் சரோஜா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்தார். வெள்ளித்திரை வாய்ப்புகளை நம்பி சின்னத்திரையை கை விட்டார். வெள்ளித்திரை படங்களும் தொடர் தோல்வியை தழுவியதால்... வேறு வழி இன்றி மீண்டும் பழைய சிங்கப்பூர் சேனலான வசந்தம் டிவியில் பணியாற்ற புறப்பட்டார். மேலும் தனியார் கலை அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழ் கலாச்சாரம் மற்றும் கிராமிய கலைகளை சிங்கப்பூர் இளைஞர்களுக்கு கற்பித்து வந்தார்.
அங்கேயே தன்னுடைய பணியை தொடர்ந்து வந்த இவருக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது மரணம் தற்போது திரையுலகை சேர்ந்தவர்களையும், இவரது ரசிகர்களையும் உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஒருவேளை ஆனந்த கண்ணன் தேர்வு செய்து நடித்த படங்கள், சூப்பர் ஹிட் தோல்வியை சந்திக்காமல் இருந்திருந்தால், ஒரு நிலையான நாயகனாக ஆனந்த கண்ணன் இருந்திருப்பார். இந்த தொடர் தோல்விகள் தான் இவரது வாழ்க்கையை மாற செய்து விட்டது.