சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஓட்டுமொத்த படக்குழுவும் பயோபபுளுக்குள் இருந்த நிலையில், தொற்று பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும அறிவித்தார்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஜூன் அல்லது ஜூலையில் ஷூட்டிங்கில் பங்கேற்க ரஜினிகாந்த் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அண்ணாத்த படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளி அன்று, அதாவது நவம்பர் 4, 2021ம் தேதி அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது. இதனால் இறுதிக்கட்ட பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அண்ணாத்த பட இயக்குநர் சிறுத்தை சிவா நேரில் சந்தித்துள்ளார். இருவரும் அண்ணாத்த பட ஷூட்டிங்கை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் அண்ணாத்த பட ஷூட்டிங் ஆரம்பமாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.