
தமிழ்நாட்டின் கோத்தகிரியில் 1992-ம் ஆண்டு மே 9-ந் தேதி செந்தாமரைக் கண்ணன், ராதா தம்பதிக்கு மகளாய் பிறந்தார் சாய் பல்லவி. இவருக்கு பூஜா என ஒரு தங்கையும் உண்டு. கோத்தகிரியில் பிறந்தாலும் அவர் வளர்ந்ததெல்லாம் கோவையில் தான். அங்குள்ள அவிலா கான்வெண்டில் தன் பள்ளி படிப்பை முடித்தார் சாய் பல்லவி. பள்ளி படிப்பை முடித்ததும் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்தார் சாய் பல்லவி. படிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் சாய் பல்லவிக்கும் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளையும் வென்றார் சாய் பல்லவி. இவர் சினிமாவில் அறிமுகம் ஆனதே ஒரு பெரிய கதை.
சினிமா ஹீரோயின் என்றதுமே நம் மனதில் ஒரு தோற்றம் தோன்றும். வெள்ளை நிறம், மாசற்ற முகம், அழகிய நடை, உடை, உயரம் என ஏதேனும் ரசனையான கணக்கு அதில் இருக்கும். ஆனால் இப்படியான எந்த வட்டத்திற்குள்ளும் சிக்காமல், முற்றிலும் வேறுபட்டு சுருள் முடி, பருக்கள், சிவந்த கன்னங்களுடன் பக்கத்துவீட்டு பெண் போல தோற்றம் கொண்டிருக்கும் ஒரு நடிகை தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத முக்கிய நடிகைகளுள் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் என்றால் அது சாய் பல்லவி தான்.
சாய் பல்லவியின் முதல் படம் மலையாளத்தில் வெளியானாலும் அது தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சக்கைப்போடு போட்டது. பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து முதல் படத்திலேயே இளசுகளின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார் சாய் பல்லவி. ஆனால் முதலில் அப்படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு விருப்பமில்லையாம். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் முதலில் அவரை தொடர்பு கொண்டபோது யாரோ ஏமாற்றுகிறார் என நினைத்து போலீசில் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார் சாய் பல்லவி. அதன் பின்னர் தான் உண்மை தெரிந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு பிரேமம் படத்தில் நடித்திருக்கிறார்.
அப்படத்திற்கு பின்னர் தான் அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் தமிழில் முதன்முதலில் நடித்த படம் தியா. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி இருந்தார். இப்படம் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து கமர்ஷியல் ரூட்டுக்கு திரும்பிய சாய் பல்லவி. தனுஷுக்கு ஜோடியாக மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். அப்படத்தில் அராத்து ஆனந்தி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் சாய் பல்லவி. இதில் துறுதுறு பெண்ணாக அவர் நடித்து கவனம் ஈர்த்திருந்தார். இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ஆடிய ரெளடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி யூடியூப்பில் அதிக பார்வைகளை பெற்ற தமிழ் பாடல் என்கிற சாதனையையும் அது படைத்துள்ளது.
நடிகை சாய் பல்லவிக்கு தமிழில் மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது சூர்யா தான். அவர் மீது தனக்கு கிரஷ் இருப்பதாக சாய் பல்லவியே பல்வேறு பேட்டிகளில் கூறி இருந்த நிலையில், தமிழில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவாரா. அப்படி சூர்யா படம் என்றதும் சாய் பல்லவி டபுள் ஓகே சொல்லி நடித்த படம் என்.ஜி.கே. செல்வராகவன் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படி தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் சாய் பல்லவிக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கிடைக்காமலேயே இருந்தது.
இதையும் படியுங்கள்... அமரன் பட கெட்டப்பில் ஸ்வீட் சர்ப்ரைஸ்; மனைவிக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன் - Viral Video!
இதையடுத்து தனுஷ் நடித்த அசுரன் படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க வெற்றிமாறன் அவரை அணுகியிருக்கிறார். ஆனால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான பாவக்கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் சாய் பல்லவி கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருந்தார். கெளரவக் கொலையை மையமாக வைத்து உருவான இந்த ஆந்தாலஜி படத்தில் தன்னுடைய நடிப்பால் அப்ளாஸ் வாங்கினார் சாய் பல்லவி.
இதையடுத்து சூர்யா தயாரித்த கார்கி திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சாய் பல்லவிக்கு பல்வேறு விருதுகளையும் பெற்றுத் தந்தது. இதையடுத்து தெலுங்கில் பிசியாக இருந்த சாய் பல்லவி, அமரன் படம் மூலம் கோலிவுட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த இந்து ரெபேகா வர்கீஸ் கதாபாத்திரம் தான் அப்படத்தின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. அமரன் திரைப்படம் சாய்பல்லவி நீண்ட நாட்களாக ஏங்கி வந்த பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது.
அமரன் படத்தில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வாங்கிய சாய் பல்லவி அப்படத்தின் வெற்றிக்கு பின் தன் மார்க்கெட் எகிறியதால் சம்பளத்தை உயர்த்தினார். அவர் தற்போது தெலுங்கில் தண்டல், இந்தியில் இராமாயணம் போன்ற படங்களில் நடிக்கிறார். இதில் இராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க நடிகை சாய் பல்லவி ரூ.6 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சினிமாவை தாண்டி விளம்பரங்களில் நடிப்பதை சாய் பல்லவி சுத்தமாக விரும்பவில்லை. இதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் தர பலர் முன்வந்தும் சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டார். இப்படி சினிமாவில் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு வளார்ந்து வரும் சாய் பல்லவியின் சொத்து மதிப்பு குறித்த விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ரூ.47 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... 'அமரன்' ஓடிடி ரிலீசுக்கு வந்த புதிய சிக்கல்! கமல் - சிவகார்த்திகேயனிடம் வைக்கப்பட்ட கோரிக்கை!